கோவில் விழாவில்
அன்னதானம் வழங்கல்
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில் திருவிழாவையொட்டி, செங்குந்த முதலியார் சமூகம் சார்பில், 51ம் ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது. கச்சேரி வீதி பெரியார் மன்றத்தில் நடந்த அன்னதான விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதேபோன்று, பெரிய மாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில், மாநகராட்சி அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெரிய மாரியம்மன் கோவிலில் வழிபட ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், மீனாட்சி சுந்தரனார் சாலையில்,
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
உழவர் சந்தைகளுக்கு
63 டன் காய்கறி வரத்து
ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு, 63 டன் காய்கறி விற்பனைக்கு வந்தது.
ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறை, ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகரில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. விடுமுறை தினமான நேற்று, 222 விவசாயிகள், 9,383 வாடிக்கையாளர்கள் வந்து சென்றனர்.
63 டன் காய்கறி, பழங்கள் விற்பனையானது. இதன் மதிப்பு, 17 லட்சத்து, 86 ஆயிரத்து, 39 ரூபாய். கோடையின் தாக்கம் கடுமையாக இருப்பதால், வரும் வாரங்களில் காய்கறி வரத்து குறைய கூடும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
இன்று பிளஸ் 2 கணிதம்,
வணிகவியல் பாட தேர்வு
ஈரோடு மாவட்டத்தில் கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, நர்சிங், வேளாண் அறிவியல், டெக்ஸ்டைல் மற்றும் டிரஸ் டிசைனிங், நியூட்ரீசியன், டயட்டீஸ் பாடங்களுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நடக்கிறது.
ஐந்து நாட்கள் இடைவெளிக்கு பின் தேர்வு நடக்கிறது. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மதியம் வகுப்பு நடக்கிறது.
பால் அளவையர் மாயம்
போலீசில் மனைவி புகார்
கோபி அருகே கடுக்காம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 45. இவர், ஐய்யம்புதுார் கூட்டுறவு பால் சொசைட்டியில் பால் அளவையராக உள்ளார். கடந்த, 21 காலை, 10:30 மணிக்கு கோபி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி புவனேஸ்வரி, 43, கொடுத்த புகார்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வனப்பகுதியில் நிதானமாக
செல்ல அறிவுறுத்தல்
அந்தியூர் அடுத்த, பர்கூர் வனப்பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கோடை காலம் துவங்கியுள்ளதால், வெயிலின் தாக்கத்தால் தண்ணீர், உணவு தேடி காட்டை விட்டு சாலைகள் வழியாக யானை, மான் உள்ளிட்டவை வரக்கூடும்.
இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. விலங்குகள் வரும் போது, வாகன ஓட்டுனர்கள் கீழே இறங்கி புகைப்படம் எடுப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது. மேலும் வாகனங்களில் செல்வோர் வேகத்தை குறைத்து செல்ல வேண்டும் என, வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூணாறுக்கு சுற்றுலா சென்ற
மாற்றுத் திறனாளிகள்
நம்பியூரில், தமிழ்நாடு கலாம் காமராஜர் அறக்கட்டளை மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், அவர்களின் பெற்றோர்களை சுற்றுலா அழைத்து சென்றனர்.
நம்பியூரில் இருந்து, 13 மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் கேரள மாநிலம், மூணாறு என்ற இடத்துக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். கேரளாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைகள், சலுகை, பயிற்சிகள் சார்ந்தும், டாட்டா நிறுவனம் மூலம் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி, தொழில் கல்வி பயிற்சிகளை பார்வையிட்டு
கேட்டறிந்தனர்.
யானைகளிடையே மோதலில்
30 வயது ஆண் யானை பலி
சென்னம்பட்டி வனத்தில், யானைகள் மோதலில், ௩௦ வயதான யானை பலியானது.
ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனப்பகுதி, உள்ளுர்தண்டா வனச்சரகத்தில், நேற்று முன்தினம் மாலை, சென்னம்பட்டி வனத்துறையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், ஒரு ஆண் யானை இறந்து விட்டது. இதை பார்த்த வனத்துறையினர், ஈரோடு மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அறிவுறுத்தலின்படி அரசு கால்நடை மருத்துவர்கள் மூவர் சென்றனர். அதே இடத்தில் யானைக்கு உடற்கூறு பரிசோதனை செய்து, யானையை புதைத்தனர். பலியான யானை, ௩௦ வயதான ஆண் யானை என்றும், யானைகள் சேர்ந்து தாக்கியதில் பலியாகி விட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ
போலீசார் விசாரணை
சென்னிமலை அருகே, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த வெள்ளோடு அனுமன்பள்ளி கொளத்துார் பகுதியில், நேற்று முன்தினம் மாலை கவுரி என்பவர் தன்னுடைய மாட்டு கொட்டகையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு தகரத்தால் வேயப்பட்ட மாட்டு கொட்டகையில் தீ பரவியது. இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனாலும் தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மாட்டு கொட்டகை எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று
13 பேருக்கு உறுதி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை, 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். மீதமுள்ள, 13 பேர் கொரோனா பிடியில் சிக்கியுள்ளனர்.
மாரியம்மன் கோவில்
தீர்த்தக்குட ஊர்வலம்
கோபி அருகே பவானி ஆற்றில் இருந்து, சத்தி மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகத்துக்காக, அணைசாலை ஊர்மக்கள் தீர்த்தக்குடம் ஊர்வலம் சென்றனர்.
சத்தியமங்கலம், கே.என்.பாளையம், அணைசாலையில், சக்தி மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபி ேஷக விழா நடக்கிறது. கே.என்.பாளையம், அணை சாலையை சேர்ந்த மக்கள், கோபி, அக்கரை கொடிவேரி அருகே பவானி ஆற்றில் இருந்து நேற்று காலை, தீர்த்தக்குடம் ஊர்வலம் சென்றனர். பின், முளைப்பாரியுடன் பெண் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை, 6:00 முதல், 7:30 மணிக்குள் கும்பாபி ேஷக விழா நடக்கவுள்ளது.
கொடிவேரியில் குவிந்த
சுற்றுலா பயணிகள்
வாட்டி வதைக்கும் வெயிலால், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் வெளியேறுகிறது. இதனால், கொட்டும் அருவியில் குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அக்னியை மிஞ்சும் அளவுக்கு, தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. வார விடுமுறை நாளான நேற்று காலை முதலே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், கொடிவேரி தடுப்பணையில் குவிந்தனர். திருப்பூர், கோவை, மதுரை மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், வெயில் உஷ்ணத்தை தணிக்க, தங்கள் குழந்தைகளுடன் அருவியில் ஆனந்தமாக குளித்து சென்றனர். வாட்டி வதைக்கும் வெயிலால், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
12.66 ஏக்கர் புறம்போக்கு நிலம்
இன்று அளவீடு செய்ய ஏற்பாடு
ஈரோட்டில், அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய் துறையினர் இன்று அளவீடு செய்ய உள்ளனர்.
ஈரோட்டில், 80 அடி சாலை அமைக்க ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்க வேண்டும் என, பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், 12.66 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை, 10:00 மணிக்கு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமையில் சர்வே துறையினர், மாநகராட்சி சர்வே துறையினர், கலெக்டர் அலுவலக வருவாய் மற்றும் சர்வே துறையினர் முன்னிலையில் அளவீடு செய்யப்படுகிறது. ஓரிரு நாளில் அளவீடு செய்து அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். பணியின் போது, போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டி.என்.பாளையம் ஒன்றிய
தி.மு.க.,செயல்வீரர்கள் கூட்டம்
ஈரோடு வடக்கு மாவட்டம், டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் பெரிய கொடிவேரியில் நடந்தது.
ஒன்றிய அவைத்தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். செயலர் சிவபாலன் முன்னிலையில், வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம் பேசினார். மாவட்ட பொருளாளர் சண்முகம், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை, இருதய பரிசோதனை முகாம் டி.ஜி.புதுார் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது. தனியார் தலைமை கண் மருத்துவர் டாக்டர்.மனோஜ் ராமச்சந்திரன், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.ரஞ்சித் ஆகியோர், பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர்.
காங்கேயம் இன மாடுகள்
ரூ.15 லட்சத்துக்கு விற்பனை
காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே, காங்கேயம் இன மாடுகள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை, ஞாயிறுதோறும் நடக்கிறது. திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்ட விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர்.
இடைத்தரகர் யாரும் இன்றி, மாடுகளை நேரடியாக விலைபேசி வாங்கலாம். நேற்றைய சந்தைக்கு மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 72 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள் 20 ஆயிரம் முதல், 62 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. மொத்தம், 42 கால்நடைகள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன.
தாராபுரத்தில் ரேக்ளா பந்தயம்
தாராபுரம் அருகே நடந்த, ரேக்ளா பந்தயத்தை திரளான பொது மக்கள் கண்டுகளித்தனர்.
தாராபுரம் அடுத்துள்ள பொன்னாபுரம், தேவநல்லுார் சாலையில், பொன்னாபுரம் ஊராட்சி மக்கள் மற்றும் ரேக்ளா கிளப் சார்பில் நேற்று காலை, 9:00 முமுதல், மதியம், 2:00 மணி வரை ரேக்ளா பந்தயம் நடந்தது. தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ரேக்ளா ஆர்வலர்கள், ரேக்ளா வண்டிகளுடன் பங்கேற்றனர். ரேக்ளா வண்டிகளில் சீறிப்பாய்ந்த காளைகளை, இருபுறமும் நின்று, திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
தாராபுரம் அருகே, புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தாராபுரம், சின்னகாம்பாளையம், சின்னப்புத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு நிதிகளின் கீழ், தார்ச்சாலை அமைத்தல், சமுதாய நலக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், துணைத் தலைவர் சசிகுமார், தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு உள்பட பலர் பங்கேற்றனர்.
ரூ.4.05 லட்சத்துக்கு
விளை பொருட்கள் விற்பனை
பவானி, மார்ச் 27-
ஈரோடு மாவட்டம், பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு நேற்று வெள்ளை ரக எள் கிலோ, 141.69 - 168.99 ரூபாய்க்கு விற்பனையானது.
சிவப்பு ரக எள், 157.69 ரூபாய், தேங்காய், 262 காய்கள் வரத்தாகி, 2,000 ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு, இரண்டு மூட்டைகள் வரத்தாகி, 6,000 ரூபாய்க்கு விற்றது. அனைத்து வேளாண் விளைபொருட்களும், 4.05 லட்சம் ரூபாய்க்கு
விற்பனையானது.