குளித்தலை: குளித்தலை அருகே, மேட்டுமருதுாரில் கொடிக்கால் வாய்க்கால் பாலம் சேதமடைந்துள்ளதால், புதிய பாலம் கட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுமருதுாரில் கொடிக்கால் வாய்க்கால் நடுக்கரை உள்ளது. இப்பகுதியில் ராஜேந்திரம், பரளி, தண்ணீர்பள்ளி, மருதுார் கிராம விவசாயிகள், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் மேட்டுமருதுார் நெடுஞ்சாலையில் இருந்து பரளிக்கு செல்லும் நடுக்கரை பாலம் சேதமடைந்து, கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இப்பகுதி விவசாயிகள், பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், விவசாயிகள் தங்களது விவசாய நிலத்துக்கு இடுப்பொருட்கள் கொண்டு செல்ல முடியாமலும், வாழை அறுவடையை ஏற்றி செல்லும், வாகனங்கள் 8 கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டிய நிலையும் உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் செலவு, மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
பொதுப்பணித்துறையினர், கொடிக்கால் வாய்க்காலில் நடுக்கரையில் சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.