கரூர்: புகையிலை தடை சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், புகையிலை உபயோக தடுப்பு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
மருத்துவமனைகள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், பொது நுாலகங்கள், பஸ் ஸ்டாண்ட், அஞ்சல் அலுவலகங்கள், ரயில் நிலையம், திரையரங்குகள், பணிபுரியும் இடங்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அலுவலகம், பொது இடங்களில் யாரும் புகைபிடிக்க கூடாது. 18 வயதுக்கு உட்பட்ட நபர்களிடம் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. தேனீர் கடைகளில் புகையிலைப் பொருட்களை காட்சிப்படுத்துதல் கூடாது. தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.
கல்வி நிலையங்களை சுற்றி 300 அடி தொலைவில் உள்ள கடைகளில் யாரும் புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது. புகையிலை தடை சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, மாவட்ட, வட்டார அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., லியாகத், இணை இயக்குனர் (நலப் பணிகள்) ரமாமணி, துணை இயக்குனர்கள்
சந்தோஷ்குமார் (சுகாதாரப் பணிகள்), சரவணன் (காச நோய்), அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.