மாயனுாரில்
மீன் விற்பனை ஜரூர்
மாயனுார் கதவணை அருகில் மீன் விற்பனை தீவிரமாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அருகே மாயனுார் காவிரி ஆற்று கதவணை பகுதியில், மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடித், வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது குறைந்த அளவில் ஜிலேபி மீன்கள் கிடைத்து வருகின்றன. இவை கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மாயனுார், கரூர், குளித்தலை, திருக்காம்புலியூர், புலியூர் ஆகிய இடங்களில் இருந்து மீன் வாங்க மக்கள் வந்திருந்தனர். நேற்று 250 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டின் கதவை உடைத்து
10 பவுன் நகை திருட்டு
கரூர் அருகே, வீட்டின் கதவை உடைத்து, 10 பவுன் நகையை திருடி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர், காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் நகுல்சாமி, 66; இவர் கடந்த, 1ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பிறகு, நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 10 பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்து, நகுல்சாமி கொடுத்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
சூதாட்டம்: 7 பேர் கைது
கரூர், தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் ஒத்தையூர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட சுப்பிரமணி, 53; பொன்ராஜ், 37; ராமசாமி, 62; சிவராஜ், 63; ரமேஷ், 42; ராமசாமி, 55; மணிவேல், 44; ஆகிய, ஏழு பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 18 ஆயிரத்து, 150 ரூபாய்
பறிமுதல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு
தென்னங்கன்று வழங்கல்
கரூர், மார்ச் 27-
கரூர் அரவக்குறிச்சி அருகில், அஞ்சூர் குப்பகவுண்டன்வலசியில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னை மர கன்றுகள் மற்றும் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், எம்.எல்.ஏ., இளங்கோ தலைமைவகித்து, பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் வேளாண் உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் க.பரமத்தி வட்டார வேளாண் மற்றும் உழவர்
நலத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மகிளிப்பட்டியில்
கோழிகளுக்கு நோய் பரவல்
கிருஷ்ணராயபுரம், மார்ச் 27-
கிருஷ்ணராயபுரம் அருகே, மகிளிப்பட்டி கிராமத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டு, நாட்டு கோழிகள் உயிரிழந்து வருகின்றன. மகிளிப்பட்டி, உடையந்தோட்டம் ஆகிய பகுதிகளில் மக்கள் வீடுகளில் நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகின்றனர். தற்போது கடுமையான வெயில் காரணமாக, நாட்டுக்கோழிகளுக்கு, நோய் தாக்குதல் ஏற்பட்டு, உயிரிழந்து வருகின்றன. இதனால், கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நாட்டுக் கோழிகளுக்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாளை நுகர்வோர் பாதுகாப்பு தின விழா
கரூர், மார்ச் 27-
கரூரில், நுகர்வோர் பாதுகாப்பு தின விழா, நாளை நடக்கிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா, நாளை (மார்ச் 28) காலை 11:00 மணியளவில் நடக்கிறது. இங்கு, உலகமயமாதல் மற்றும் தாராளமயமாதல், விரைவான தொழில்நுட்ப மாற்றம், விளம்பரத்தின் தன்மை மாறுதல், உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் அல்லது தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக்கொள்ளும் வழிமுறைகள் போன்ற தலைப்புகளை மையமாக வைத்து ஓவியப்போட்டி, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிணற்றில் குளிக்க சென்ற
கல்லுாரி மாணவர் பலி
கரூர், மார்ச் 27-
கரூர் அருகே, கிணற்றில் குளிக்க சென்ற பொறியியல் கல்லுாரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு அரியகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரது மகன் தருண், 20; தளவாப்பாளையத்தில் உள்ள, தனியார் பொறியியல் கல்லுாரியில், இ.சி.இ., பிரிவில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வெங்கமேடு ராம் நகரில் உள்ள, விவசாய கிணற்றில் குளிக்க சென்ற தருண், நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
பா.ஜ., பட்டியல் அணி
செயற்குழு கூட்டம்
கரூர், மார்ச் 27-
கரூர் மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி சார்பில், செயற்குழு கூட்டம், தலைவர் முருகேசன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில், கரூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும், பட்டியல் அணி சார்பில், 100 இடங்களில் கட்சி கொடியேற்ற வேண்டும், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, பட்டியல் இன மக்கள் பயன்பெறும் வகையில், மாநில அரசு செலவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில பட்டியல் அணி துணை தலைவர் தலித் பாண்டியன், மாநில செயலாளர் சுரேஷ், மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன், பொதுச்செயலாளர் ஆறுமுகம், செயலாளர்
சக்திவேல் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வீட்டின் அருகே
கட்டுவிரியன் பாம்பு மீட்பு
கரூர், மார்ச் 27-
கரூர் அருகே, வெங்கமேடு, வி.வி.ஜி., நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 60; அப்பகுதியில், பூங்குயில் நகரில் ஒரு வீட்டின் சிறிய சந்தில், ஐந்து அடி நீளமுள்ள கட்டு விரியன் பாம்பு இருப்பதாக, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற லோகநாதன், கட்டு விரியன் பாம்பை லாவகமாக பிடித்து, பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்தார். பின், அந்த பாம்பை தான்தோன்றிமலையில் உள்ள, வனச்சரக அலுவலகத்தில், லோகநாதன் ஒப்படைத்தார். வீட்டின் அருகே, கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டதால், வெங்கமேடு பூங்குயில் நகரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வரவணை பஞ்சாயத்தில்
இலவச மருத்துவ முகாம்
குளித்தலை, மார்ச் 27-
கடவூர் அருகே, வரவணை பஞ்., நிர்வாகம், பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தினர் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.
வேப்பங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் மருத்துவ முகாமை, பஞ்., தலைவர் கந்தசாமி தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தருமராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெரால்டு ஆரோக்கியராஜ், பஞ்., துணை தலைவர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வரவணை பஞ்., கிராமங்களில் இருந்து வந்த 755 பேருக்கு, கரூர் தனியார் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் கலந்துகொண்டு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஹெச்.ஐ.வி., கொழுப்பின் அளவு, ஈ.சி.ஜி., ஸ்கேன், சளி, இருதய நோய் கண்டறிதல், கர்ப்பபை வாய் புற்றுநோய், கண்புரை உட்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனை வழங்கினர். முகாமில் பசுமைக்குடி இயக்கத்தினர், பஞ்., வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பசுபதீஸ்வரர் கோவிலில்
உழவார பணி
கரூர், மார்ச் 27-
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று, உழவார பணிகள் நடந்தன.
பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா, நாளை காலை, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில், பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. வரும் ஏப்., 2ல் சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 3ல் திருகல்யாண உற்சவம், 5ல் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவை முன்னிட்டு, சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில், நேற்று உழவார பணிகள் நடந்தன. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட சிவனாடியார்கள் பங்கேற்று, கோவிலில் துாய்மை பணிகளில் ஈடுபட்டனர்.
குட்கா விற்பனை
17 பேர் கைது
கரூர், மார்ச் 27-
கரூர் மாவட்டத்தில், அரசால் தடைசெய்யப்பட்ட, குட்கா பொருட்களை விற்றதாக, 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம், சட்டம் - ஒழுங்கு போலீஸ் எஸ்.ஐ.,க்கள் தலைமையில் போலீசார், கரூர் டவுன், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெள்ளியணை, மாயனுார், லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளில், சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக
வரதராஜ், 70; பிரபு, 40; தவசுவேலுசாமி, 35;
சத்தியராஜ், 27; ஜெய்சங்கர், 53; நடேசன், 65; சுப்பிரமணி, 63; மற்றொரு சுப்பிரமணி, 63; அமுதா, 55; கமலம், 75; ஜலால் ஜமால் மைதீன், 38; முஜிப் ரஹ்மான், 57; கார்த்திக், 38; சுப்பிரமணி, 72; லோகநாதன், 33, மற்றொரு பிரபு, 39; பழனிசாமி, 50; உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
மது விற்ற 8 பேர் கைது
கரூர், மார்ச் 27-
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ., அழகுராம் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, குளித்தலை, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக பிரபு, 35; அழகுராஜ், 42; ரங்கராஜ், 64; காளிமுத்து, 66; முருகன், 60; திலகவதி, 50; செந்தில்குமார், 47; கணபதி, 43; ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 117 மதுபாட்டில்கள், ஐந்து லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.