குளித்தலை: நங்கவரம் டவுன் பஞ்., மற்றும் சூரியனுார் பஞ்., பகுதி கிராம மக்கள், உய்யக்கொண்டான் வாய்க்காலில் புதிய பாலம் கட்ட வேண்டும் என, கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சூரியனுார் கிராமத்தில் இருந்து திருச்சி மாவட்டம், கொடியாலம் பஞ்., இடையே உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்கால் பெட்டவாய்த்தலையில் இருந்து, திருச்சி மாவட்டம் வழியாக தஞ்சாவூர் வரை செல்கிறது.
இந்த வாய்க்காலில் சூரியனுாரில் பாலம் இல்லாததால், கரூர், திருச்சி மாவட்ட மக்கள், விவசாயிகள், பெருகமணி மற்றும் குழுமணி வழியாக 20 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டி உள்ளது. உய்யகொண்டான் வாய்க்காலில் புதிய பாலம் அமைத்தால் இரண்டு மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை, ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டால், போக்குவரத்து மாற்றம், மீட்பு பணிகளுக்கு இந்த பாலம் பயனுள்ளதாக அமையும்.
எனவே, உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்காலில் சூரியனுாரில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என, குளித்தலை
எம்.எல்.ஏ., மாணிக்கம், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி ஆகியோரிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.