கரூர்: தமிழக காங்., கட்சி தலைவர் உத்தரவை மதிக்காமல், கரூரில் காங்., கட்சியினர், இரண்டு மணி நேரத்தில் சத்தியாகிரக போராட்டத்தை முடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அகில இந்திய காங்., கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், அவதுாறு வழக்கில், இரண்டாண்டு சிறை தண்டனை பெற்றதால், அவருடைய எம்.பி.,
பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து, நாடு முழுவதும் காங்., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் நேற்று காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, காந்தி சிலை முன்பு, காங்., கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என, மாநில காங்., தலைவர் அழகிரி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
அதன்படி, கரூர், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள, காந்தி சிலை அருகே, நேற்று காலை, 11:00 மணிக்கு, காங்., மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி தலைமையில், சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது. அதில், 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆனால், சத்தியாகிரக போராட்டத்தை நேற்று மாலை, 5:00 மணி வரை நடத்தாமல், மதியம், 1:00 மணிக்கே முடித்துக்கொண்டு, காங்., கட்சியினர் ஓட்டம் பிடித்தனர். இதனால், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இருந்து சத்தியாகிரக போராட்டத்துக்கு,
தாமதமாக வந்த காங்., கட்சியினர்
ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட காங்., கட்சியினர் கூறுகையில், ''கரூரில் இன்று (நேற்று) காலை முதல் கடுமையான வெயில் அடித்தது. துணி பந்தல் போட்டிருந்த சூழ்நிலையிலும், போராட்டத்தில் வயதானவர்கள் இருந்ததால், வெயில் கொடுமை காரணமாக, விரைவாக சத்தியாகிரக போராட்டத்தை முடித்து விட்டோம்'' என்றனர்.
லாலாப்பேட்டை
கிருஷ்ணராயபுரம் வட்டார காங்., சார்பில், லாலாப்பேட்டை காந்தி சிலை முன்பு, சத்தியாகிரக போராட்டம் நடந்தது. மாநில ஓ.பி.சி., அணி துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், கிருஷ்ணராயபுரம் வட்டார காங்., தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கிருஷ்ணன், மகாதானபுரம் பஞ்சாயத்து காங்., நிர்வாகி மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.