கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதி யில் எஸ்.பி.ஐ., வங்கி கிளை அமைக்க வேண்டும் என, அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் --கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி அமைந்துள்ளது. இங்கு, ஒன்றிய அலுவலகம், தனியார் கல்லுாரிகள், தொழில் நிறுவனங்கள், கிரஷர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து பகுதி மக்கள், ஸ்டேட் வங்கி வாடிக்கையாளராக உள்ளனர்.
ஆனால், க.பரமத்தி சுற்று வட்டார பகுதிகளில் எஸ்.பி.ஐ., வங்கிக் கிளை இல்லை. இவர்கள், 10 கி.மீ., தொலைவில் உள்ள தென்னிலை
அல்லது, 20 கி.மீ., தொலைவில் உள்ள கரூரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், அரசு பணியாளர்கள்,
ஓய்வூதியதாரர்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோர் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து ஓய்வூதியதாரர்கள் கூறியதாவது: தென்னிலை, சின்னதாராபுரம், கார்வாழி ஆகிய பகுதியில் எஸ்.பி.ஐ., வங்கிக் கிளைகள் உள்ளன. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த க.பரமத்தியில் இந்த வங்கி கிளை இல்லை. இதனால் அலைச்சல், காலவிரயம் ஏற்படுகிறது. எனவே, க.பரமத்தியில் எஸ்.பி.ஐ., கிளை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.