கரூர்: கரூர் மாநகர பகுதிகளில், சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாரம் ஏற்றி செல்லும், சரக்கு வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கரூர் நகர பகுதியில் தொழில் நிறுவனங்கள், டெக்ஸ்டைல்கள் அதிக அளவில் உள்ளன. இவற்றுக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் மரம், கண்ணாடி, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பாரங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதல் பாரம் ஏற்றிக் கொண்டு செல்கின்றன.
கம்பிகள், மரக்குச்சிகளை போன்ற பொருட்களை ஏற்றி செல்லும்போது வாகனங்களை விட, வெளியில் நீட்டிக் கொண்டு, முன்னாள் மற்றும் பின்னால் செல்லும் இதர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் எடுத்துச் செல்கின்றனர்.
பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களை ஏற்றி செல்லும்
போது, சிவப்பு கொடி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்ல வேண்டும். ஆனால், கரூரில், சரக்கு வாகனங்களை இயக்குவோர் இந்த விதிகளை பின்பற்றுவதே இல்லை. இதனால், இத்தகைய வாகனங்களுக்கு பின்னால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, கரூர் போக்குவரத்து போலீசார், அதிக அளவில் சரக்குகளை ஏற்றி செல்வோர் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக சரக்கு வாகனங்களை இயக்குவோரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.