ஆவடி: ஆவடி அடுத்த பருத்திப்பட்டு, கோலடி சாலையில், வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
இப்பள்ளியில், பொன்மதி, 33, என்பவர் முதன்மை முதல்வராக பணியாற்றி வருகிறார். அம்பத்துாரைச் சேர்ந்த ராபின்சன், 39, என்பவர், கணக்காளராக பணியாற்றி வந்தார்.
ராபின்சன், பள்ளிக்கு வர வேண்டிய 49 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தெரிய வந்தது. இது குறித்து புகாரின்படி, ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராபின்சன் தலைமறைவானார்.
இந்த நிலையில், பொள்ளாச்சியில் தலைமறைவாக இருந்த அவரை, நேற்று காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.