செங்குன்றம்: 'ஆன்லைன்' வர்த்தகத்தில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் கணவன், மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை அம்பத்துார், லெனின் நகர், 15வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பகவத்சிங். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். அவர், மகன் முருகேசன், 45, மருமகள் ஜெயந்தி, 42, பேரன், பேத்தி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
தனியார் நிறுவனத்தில் டிசைனராக வேலை செய்து வந்த முருகேசன், 'ஆன்லைன்' வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். செங்குன்றம் அடுத்த எல்லையம்மன் பேட்டை, பெருமாள் கோவில் தெருவில், வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்.
அதன் ஒரு பகுதியில், வார விடுமுறை நாட்களில், குடும்பத்தினருடன் சென்று தங்குவது வழக்கம். நேற்று முன் தினம், தன் மனைவியுடன் முருகேசன் அங்கு சென்றார். ஆனால், நேற்று காலை வரை வீட்டிற்கு திரும்பவில்லை.
அதனால், அவரது தந்தை பகவத்சிங், மகன், மருமகள் ஆகியோரின் 'மொபைல் போன்'களுக்கு தொடர்பு கொண்டார். ஆனால், அவரது அழைப்பு ஏற்கப்படவில்லை. அதனால், எல்லையம்மன்பேட்டைக்கு நேரில் சென்றார்.
அங்கு, அறையில் முருகேசனும், ஜெயந்தியும் தனித்தனியாக துாக்கிட்டு தற்கொலை செய்து இறந்து கிடந்தனர்.
புகாரின் படி, செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
'ஆன்லைன்' வர்த்தகத்தில் சில மாதங்களுக்கு முன் முருகேசனுக்கு நஷ்டம் ஏற்பட்டு, நண்பர்களிடம் கடன் வாங்கி இருக்கிறார்.
தம்பி ராம்குமார் மற்றும் தங்கை பவானி ஆகியோரிடம், நகையை பெற்று, அதை அடகு வைத்து பணம் புரட்டி, நஷ்டத்தை ஈடுகட்ட முயன்றிருக்கிறார்.
ஆனாலும், தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தால், கடன் மேலும் அதிகரித்துள்ளது. அதனால், மனமுடைந்த அவரும், மனைவியும், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.