நந்தம்பாக்கம், ஆலந்துார் மண்டலத்தில் உள்ள நந்தம்பாக்கத்தில், 27 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தை அமைச்சர்கள் நேரு, அன்பரசன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது, ஆலந்துார் நகராட்சியுடன் நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம் ஆகிய பேரூராட்சி, ஊராட்சிகள் இணைத்து ஆலந்துார் மண்டலம் உருவாக்கப்பட்டது.
இதில், ஆலந்துார் நகராட்சியில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில், 'அம்ருட், சிங்காரச் சென்னை 2.0' திட்டங்களின் நிதியில், நந்தம்பாக்கத்தில் 27 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நேற்று பூமிபூஜையுடன் நேற்று துவக்கப்பட்டன.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பரசன் ஆகியோர் இதை துவக்கி வைத்தனர்.
விழாவில், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மண்டல குழு தலைவர் சந்திரன், வார்டு கவுன்சிலர் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, அமைச்சர் நேரு பேசியதாவது:
இந்த திட்டத்தில் குழாய்கள் புதைக்கப்பட்டவுடன் சாலை அமைக்கப்படும். சென்னையில் வீடு தோறும் குடிநீர் வழங்கும் பணி, குறித்த காலத்தில் முடிக்கப்படும். சென்னையில், அடையாறு, கூவம், பகிங்ஹாம் ஆகியவற்றில், 528 இடங்களில் கழிவு நீர் கலப்பதால் சாக்கடையாகிவிட்டது. இதனை முழுமையாக நிறுத்தி, கழிவு நீர் சுத்திகரித்து மறுசுழற்சிக்கான திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் அன்பரசன் பேசிய போது, 'கடந்த, 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஆலந்துார் மண்டலத்திற்கு எந்த பணியும் மேற்கொள்ளவில்லை.
முகலிவாக்கம், மணப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவக்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை அமைக்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர். விரைவில் சாலை அமைக்க வேண்டும்' என்றார்.