கள்ளக்குறிச்சி : கூத்தக்குடியில் ஊராட்சி துணைத் தலைவியின் மகன் கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் ஜெகன்ஸ்ரீ,19; மாணவர். இவரது தாய் செந்தமிழ்ச்செல்வி ஊராட்சி துணைத் தலைவியாக உள்ளார். கடந்த 24ம் தேதி ஜெகன்ஸ்ரீ திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக, வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, ஜெகன்ஸ்ரீயை தேடினர். இந்நிலையில், கூத்தக்குடி வனப்பகுதியில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கடந்த 25ம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தாசில்தார் சத்தியநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஜெகன்ஸ்ரீயின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில் கூத்தக்குடியை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன்,31; ரவிச்சந்திரன் மகன் அபிலரசன்,27; மணிகண்டன் மகன் ஆகாஷ்,20; மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ஜெகன்ஸ்ரீயை கொலை செய்து வனப்பகுதியில் புதைத்தது தெரிந்தது.
விசாரணையில், கார்த்திகை தீபத்தன்று அய்யப்பன், ஜெகன்ஸ்ரீ ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதை மறைத்து அய்யப்பன் நண்பராக ஜெகன்ஸ்ரீயிடம் பேசி பழகியுள்ளார்.
கடந்த 24ம் தேதி மாலை அய்யப்பன், அபிலரசன், ஆகாஷ், 17 வயது சிறுவன் மற்றும் ஜெகன்ஸ்ரீ ஆகியோர் கூத்தக்குடி வனப்பகுதியில் ஒன்றாக மது அருந்தினர். அப்போது, முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மதுபாட்டில் மற்றும் கத்தில் குத்தி கொலை செய்தனர்.
பின்னர் அங்கிருந்த மரத்திற்கு அடியில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டனர்.
இதனையடுத்து அய்யப்பன், அபிலரசன், ஆகாஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கடலுார் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.