விழுப்புரம் : சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 3 பேர், விழுப்புரம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். வழக்கறிஞர்கள் அவர்களைத் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
சென்னை, பெருங்குடி ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 33; சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.
இவர், கடந்த 25ம் தேதி, வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் ஜெய்கணேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
துரைப்பாக்கம் போலீசார், வழக்குப் பதிந்து 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொலை வழக்கில், சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் கண்ணன் மகன் முருகன், 26; அதே பகுதி தெற்கு மாட வீதியைச் சேர்ந்த வேலுமகன் பிரவீன், 23; சென்னை, மண்ணுார்பேட்டை பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த சின்னராசு மகன் ஸ்ரீதர், 27; ஆகியோர், நேற்று மதியம் 12:00 மணியளவில் விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர்.
அப்போது, அங்கு வந்த விழுப்புரம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சரணடைந்த 3 பேரையும் தாக்க முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
அப்போது, வழக்கில் தொடர்புடைய 3 பேரின் சரண்டர் மனுவுக்காக, யாரும் ஆஜராகக் கூடாது என கூறிய வழக்கறிஞர்கள், சரண்டர் மனுவையும் ஏற்க கூடாது என நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி ராதிகா, சரணடைந்த 3 பேரையும் ஏப்ரல் 5ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பிறகும் கோர்ட் வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார், சரணடைந்த 3 பேரையும் மதியம் 2:00 மணியளவில் பாதுகாப்பாக விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறைக்கு அழைத்து சென்றனர்.