கடலுார் : கடலுாரில் தவறான சிகிச்சையால் ஆட்டோ டிரைவர் இறந்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு, 38; ஆட்டோ டிரைவர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடலுார், மஞ்சக்குப்பம் பாஷியம் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் அனுமதிக்கப்பட்டார்.
பாபு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக குடும்பத்தினருக்கு நேற்றிரவு 8:00 மணிக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டு, கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
பாபு இறப்புக்கு தவறான சிகிச்சையே காரணம். எனவே, சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார், பாபு உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.