விழுப்புரம் : மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி, 2 பேர் இறப்புக்கு காரணமான தனியார் பஸ் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த பொம்பூரைச் சேர்ந்தவர் ராமு, 46; தனியார் பஸ் டிரைவர். இவர், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி, விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி பஸ்சை ஓட்டிச்சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக முண்டியம்பாக்கத்தில் சாலையோரம் நின்றிருந்த வேன் மீது பஸ் மோதியது.
இதில், வேனில் இருந்த திருச்செந்துாரைச் சேர்ந்த சிவமுருகன், 46; மற்றும் சிவசேகர், 51; ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது குறித்து ராமு மற்றும் பண்ருட்டியை சேர்ந்த கண்டக்டர் தட்சணாமூர்த்தி, 60; ஆகியோரை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், ராமு குடிபோதையில் பஸ் ஓட்டியது தெரிய வந்தது.
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் நீதிபதி சுந்தரபாண்டியன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
குடிபோதையில் பஸ் ஓட்டி, 2 பேர் இறப்புக்கு காரணமான ராமுவிற்கு, 5 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்தும், கண்டக்டர் தட்சணாமூர்த்தியை வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.