மயிலம் : மயிலத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினரை, கத்தியைக் காட்டி மிரட்டிய 7 பேர் மீது மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து, 4 பேரை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கடந்த 24ம் தேதி இரவு நடந்த திருவிழாவின் போது, நாதஸ்வர கலைஞரிடம் 7 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்தது.
அங்கிருந்த மயிலம் ஊராட்சி வார்டு உறுப்பினர் காசிநாதன் மகன் சரவணன், 26; தட்டிக்கேட்டார். அப்போது அந்த 7 பேரும் சரவணனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் கூட்டேரிப்பட்டு பகுதியில் கார், பைக்குடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள், பிள்ளையார்குப்பம் அருண், 28; புதுச்சேரி, அரியாங்குப்பம் உதயா, 39; அஸ்வின், 35; கோர்க்காடு அன்பரசன், 30; எனவும், திருவிழாவில் சரவணனை மிரட்டியதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து குவாலிஸ் கார், 2 பைக்குகள், 8 மொபைல் போன்கள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த கார்த்தி, பிரவீன் குமார், கருவடிக்குப்பம் கதிரேசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.