சின்னாளபட்டி--அம்பாத்துறை மேலக்கோட்டை பகுதி மக்கள் குடிநீர், ரோடு, சுகாதார வசதிகளுக்காக தவிக்கும் அவலம் பல மாதங்களாக நீடிக்கிறது.
அம்பாத்துறை சின்னாளபட்டி வழித்தட மேலக்கோட்டை பகுதியில் நெசவாளர் காலனி, ம.பொ.சி., காலனி, வாணியர் தெரு, வண்ணார் தெரு பகுதிகளில் 200-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
தினமும் இப்பகுதி வழியாக 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் செல்கின்றனர். இருப்பினும் போதிய தார் ரோடு வசதி இல்லை.
பல தெருக்களில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. குப்பை கழிவுகள் சரிவர அள்ளப்படாமல் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. குடிநீர் வினியோக குளறுபடியால் தண்ணீருக்காக மக்கள் தவிக்கின்றனர்.
தெருக்களில் புதர் செடிகள் மண்டியுள்ளன. கொசுத்தொல்லை அதிகரிப்பால் தொற்று பரவல் அபாயம் நீடிக்கிறது. இப்பகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளம்போல் கழிவு நீர்
ஏ.துரைப்பாண்டியன், ஜமீன்தார், அம்பாத்துறை : சில தெருக்களில் மட்டுமே சிமென்ட் ரோடு உள்ளது. இதுவும் பல இடங்களில் பெயர்ந்து உள்ளது. சமதளமாக இல்லாததால் மழை நீர் குளம் போல் தேங்குகிறது. சாக்கடை வசதி இல்லை. ம.பொ.சி., காலனியில் அசுத்த நீர் குளம் போல் தேங்கியுள்ளது. சின்னாளபட்டி ரோட்டின் இருபுறமும் புதர் அடர்ந்துள்ளன.
போதை நபர்கள் தொல்லை
ஏ.எம்.இளங்கோவன், பொறியாளர், மேலக்கோட்டை : பள்ளி மாணவர்கள், முதியோர், பெண்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோர், இவ்வழியை நம்பி உள்ளனர். போதிய தெருவிளக்கு வசதி இல்லை. கரியன்குளம் கரைப்பகுதியில் டாஸ்மாக் அமைந்துள்ளதால் போதை ஆசாமிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் ரோடு சேதமடைந்து உள்ளது.
--குடிநீர் தட்டுப்பாடு
அமுதா, குடும்பத்தலைவி, மேலக்கோட்டை: ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்துவதில் அலட்சியம் நீடிக்கிறது. போதிய குடிநீர் கிடைப்பது இல்லை. 15 நாட்கள் இடைவெளியில் வினியோகிக்கின்றனர். தாமதமாகும் சூழலில் புழு உற்பத்தியான தண்ணீரையும் காய்ச்சி குடிக்கும் அவல நிலை உள்ளது. கிராம சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டும் இப் பிரச்னையை ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
துரிதப்படுத்த நடவடிக்கை
சேகர் தலைவர், அம்பாத்துறை ஊராட்சி : ம.போ.சி., காலனியில் இருந்து தனி வழித்தடம் மூலம் கழிவு நீரை வெளியேற்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.
அசுத்தநீர் தேங்காத வகையில் கழிவுகளில் இருந்து தண்ணீரை பிரித்து எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. குப்பை கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை மூலம் அகற்றும் செயல்முறை கண்காணிக்கப்படும். குடிநீர் வழங்கலுக்கான பணிகள் துரிதப்படுத்தப்படும், என்றார்.