எம்.சுபர்னா, கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வடமதுரை: கணித தேர்வு சிறிது கடினமாகவே இருந்தது. ஒன்று, ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன. அதிலும் கட்டாயம் விடை அளிக்க வேண்டும் என்கிற வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன. வகுப்பறையில் முக்கியமானது என சுட்டி காட்டப்பட்டிருந்த வினாக்களில் இருந்து கேள்விகள் இல்லாமல் வேறு வினாக்களாக இருந்தன. வினாத்தாளுக்குரிய 90 ல் 25 முதல் 30 மதிப்பெண்கள் பெற்றால் 'இன்டேனல்' மதிப்பெண் 10 பெற்று தேர்ச்சி பெறலாம்.
எஸ்.செபாஸ்டின் ஆகாஷ், அரசு மேல்நிலைப்பள்ளி வேடசந்துார்: ஒன்று, இரண்டு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. மூன்று, ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்துமே கடினமாக இருந்தன. இருந்தாலும் அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதி உள்ளேன். இம்முறை கணிதத்தில் நுாற்றுக்கு நுாறு எடுப்போர் எண்ணிக்கை வழக்கத்தைவிட சற்று குறைவாகத்தான் இருக்கும்.
கலைவாணி, அருள்ஜோதி வள்ளளார் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: கணித தேர்விற்காக கடினமாக முயற்சி செய்து வந்தேன். 3 மதிப்பெண் வினாக்கள் மிக கடினமாக இருந்தன. ஒருசில வினாக்களுக்கு தான் பதில் தெரிந்தது. மற்ற வினாக்களுக்கு பதில் தெரியவில்லை. 6, 7வது பாடத்திலிருந்து எந்த வினாக்களும் வரவில்லை. அதிக வினாக்கள் படிக்காத பாடத்திலிருந்து வந்திருந்தன. இந்தத் தேர்வு என்னை பொறுத்த வரை கடினமாகத் தான் இருந்தது. ஆசிரியர்களும் எங்களுக்கு நல்ல முறையில் தான் பாடம் கற்பித்தனர். கணித தேர்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜீ.பூஜா, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒட்டன்சத்திரம்: கணித தேர்வில் கிரியேட்டிவ் கேள்விகள் அதிகமாக இருந்ததால் சென்டம் எடுப்பது கடினம். ஒரு மதிப்பெண் வினாக்களில் ஆறு வினாக்கள் கடினமாக இருந்தன. இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினா கடினமாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்களில் ஐந்து எளிதாகவும் இரண்டு வினாக்கள் கடினமாகவும் இருந்தன. மொத்தத்தில் 15 மதிப்பெண்ணுக்கு கிரியேட்டிவ் வினாக்களாக கேட்கப்பட்டிருந்தன. பல வினாக்கள் பயிற்சி வினாக்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. கேள்விகள் கடினமாக இருந்த போதிலும் தேர்ச்சி பெறுவது கடினமில்லை. நன்றாக படிப்பவர்கள் கூட நுாற்றுக்கு நுாறு எடுப்பது சிரமம் தான்.
அ.கேத்தரின் டேவிட்சன், என்.எஸ்.எஸ்.வி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பட்டிவீரன்பட்டி: கட்டாயம் எழுத வேண்டிய வினாக்கள், ஒன்று, இரண்டு மதிப்பெண் வினாக்களில் மூன்று, நன்கு யோசித்து எழுத வேண்டியதாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாவில் புத்தகத்தில் உள்ள எண்களை தவிர்த்து விட்டு மாற்று எண்களைக் கொண்டு கேள்விகள் கேட்டிருந்தனர். புத்தகத்துக்கு பின் உள்ள வினாக்கள், சொந்தமாகவும் வினாக்கள் இடம்பெற்றிருந்தன. நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் என்ற பாடத்தில் இருந்து ஐந்து மதிப்பெண் வினாக்களில் இரண்டு அவ்வாறு கேட்கப்பட்டிருந்தன. மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட வினாக்களே இந்த ஆண்டும் கேட்கப்பட்டிருந்தன. புத்தகத்தை முழுவதுமாக படித்தவர்கள் 95 மதிப்பெண் எடுக்கலாம்.
பிரவீன் ராகவேந்திரா, விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, பண்ணைக்காடு: கணித தேர்வுக்கான வினாக்கள் எதிர்பார்த்த அளவு வந்திருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் கிரியேட்டிவாக கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. மூன்று, இரண்டு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன. இருந்த போதும் தேர்வு எளிமையாகவே இருந்தது.
வே.கதிர்வேல், கணித ஆசிரியர், பி.ஆர்.ஜி.வேலப்ப நாயுடு மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, நெய்க்காரப்பட்டி, பழநி: யோசித்து வினாக்களுக்கு பதில் அளித்திருந்தால் முழு மதிப்பெண் பெறலாம். தேர்வில் கட்டாயம் பதில் அளிக்க வேண்டிய இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்களில் தலா ஒரு வினா யோசித்து எழுதுவது போல் அமைத்துள்ளனர். புத்தகத்திலிருந்து சில வினாக்கள் இடம்பெறவில்லை. சராசரி மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவது கடினம். அதிகளவில் மாணவர்கள் வெற்றி பெறுவது எளிது. ஐந்து மதிப்பெண் வினாக்களில் ஒரு வினாவும், அதற்கான மாற்று வினாவும் யோசித்து எழுத வேண்டியதாக அமைத்து உள்ளனர். ஒரு மதிப்பெண் வினாக்களில் ஏழு வினாக்கள் கடினமானவை. யோசித்து எழுதும் மாணவர்களுக்கு நேர பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் முழு மதிப்பெண் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும்.