நாகப்பட்டினம், :'நாகையில் சி.பி.சி.எல்., நிறுவன விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு உரிய விலை வழங்க வேண்டும்' என, நாகை விவசாயிகள் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரிடம் மனு அளித்தனர்.
நாகை மாவட்டம், பனங்குடி விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் சங்கத்தினர், மத்திய பெட்ரோலிய மற்றும் எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
நாகை மாவட்டம், பனங்குடியில் 1992ல் எம்.ஆர்.எல்., சுத்தகரிப்பு நிறுவனத்திற்காக, 600 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில், 200 ஏக்கரில் சுத்தகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. பின்னர் சி.பி.சி.எல்., என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 2020ல் ஆலை விரிவாக்கத்திற்காக, 658 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தொழிற்சாலைக்கு நிலம் அளிப்போர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என, 1992ல் அறிவிக்கப்பட்டது.
இதுவரை யாருக்கும் வேலை அளிக்கப்படவில்லை. தற்போது கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய சந்தை விலை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு சி.பி.சி.எல்., நிறுவனத்தில் தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.