ஸ்ரீவில்லிபுத்துார் : காதலித்து, பாலியல் உறவு கொண்டு, அதை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதுடன், திருமணத்திற்கு மறுத்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், இன்ஜி., கல்லுாரி மாணவனுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 23. இவர், 2020ல், இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்த போது, விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த, 17 வயது முதலாமாண்டு கல்லுாரி மாணவி ஒருவருடன் மொபைல் போன் வாயிலாக பழகினார்.
மாணவிக்கு காதல் வலை விரித்த அவர், 2021 பிப்ரவரியில் சிவகாசி வந்து, மாணவியுடன் பாலியல் உறவு கொண்டார். மாணவிக்கு தெரியாமல் அதை வீடியோவும் எடுத்தார்.
இந்நிலையில், திருமணம் செய்யும்படி மாணவி வலியுறுத்திய போது மறுத்த விக்னேஸ்வரன், பாலியல் உறவு கொண்ட வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பி விட்டதாக கூறினார். வேதனைஅடைந்த மாணவி, 2021 பிப்., 5ல் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விக்னேஸ்வரனை சிவகாசி போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார், 'போக்சோ' நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார்.
விக்னேஸ்வரனுக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.