கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடத்துறை மற்றும் கலெக்டர் உத்தரவிட்டும், பணிகளை கிடப்பில் போட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரி வி.சி.,பிரமுகர் மாதேஷ், தலைமையில், 70க்கும் மேற்பட்டோர் நேற்று, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள், கூறியதாவது:
கெலமங்கலம் அடுத்த போடிச்சிப்பள்ளியில், ஆதிதிராவிட நலத்துறை வழங்கிய இடத்தில், 60க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். அப்பகுதிக்கு செல்ல பாதையில்லை.
ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் அப்பகுதி மக்கள், நடைபாதையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, வருவாய்த்துறையினர் அகற்றினர். ஆனால், சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்கவில்லை.
அதேபோல ஓட்டையப்பன்கொட்டாயில், ஆதி திராவிடர்கள் வசிக்கும், 40 வீடுகளுக்கு பொதுவழிப்பாதை பிரச்னையை அதிகாரிகள் தீர்க்கவில்லை. வரட்டனப்பள்ளி, மாதேப்பட்டி,
கொடி திம்மனஹள்ளி, தளவாய்ப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆதிதிராவிட நலத்துறை மூலம், பல்வேறு இடங்களில் நிலம் ஒதுக்கப்பட்டும் பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை. கலெக்டர் உத்தரவிட்டும், இப்பணிகளை செய்யாமல் தட்டிக்கழிக்கும் அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
போடிச்சிப்பள்ளியில் அகற்றிய ஆக்கிரமிப்பை சாலை அமைக்கும் பணியை துவக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., தமிழரசி உள்ளிட்ட அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.