கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட தோழி கூட்டமைப்பு சார்பில், வேப்பனஹள்ளி ஒன்றியம், மேலுார் கொள்ளகொட்டாய் கிராமத்தில், பெண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலை தடுக்க, தீர்மானம் நிறைவேற்றும்
பிரசார கூட்டம் நடந்தது. குழுத்தலைவி வசந்தி வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் மற்றும் சுவார்டு நிறுவன இயக்குனர் ஜலாலுதீன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், பெண் தொழிலாளர்கள், பணியிடங்களான பஞ்சாலைகள், கார்மென்ட்ஸ், அரிசி ஆலை, முந்திரி தொழிற்சாலை, ஷூ கம்பெனி, கொலுசு பட்டறை, டெக்ஸ், ஜவுளிக்கடைகள், மால்கள், பாக்கு சீவல் மற்றும் சிறு, குறு நிறுவனங்களில் பெண்களுக்கு ஏற்படும் சுரண்டல்களை தடுக்க வேண்டும். மேலும், பாதுகாப்பான வேலையிடம், 8 மணி நேரம் வேலை, பாலியல் தொந்தரவு இல்லாத நிலை, அதிகபட்ச நேரம் வேலை செய்தால், சட்டப்படியான கூலி, பணி நிரந்தரம், விடுதிகளில் சத்தான உணவு, சுகாதாரமான விடுதி அறைகள் மற்றும் கழிவறைகள், ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடன் வீட்டிற்கு செல்ல அனுமதி, உள்ளிட்ட சட்ட உரிமைகள், பாதுகாப்பான வன்முறையற்ற பணிச்சூழல் ஆகியவற்றை, உறுதிப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரவீன்குமார் நன்றி கூறினார்.