கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியில், ஜோகுலுார் மாரியம்மன் திருவிழா கடந்த, 24ல் விநாயகருக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பெருமாள் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி ஊர்வலமும் நடந்தன. 25 காலை
ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு பூஜை நடந்தன.
பெண்கள், ஓம்சக்தி, பாத்துார் மாரியம்மன், சேறு மாரியம்மன், ஜோகுலுார் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்றனர். கடந்த, 26ல் காலை, கங்கையம்மன், குண்டி மாரியம்மன் கோவிலுக்கு, பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தனர். மாலை, 7:00 மணிக்கு ஜோகுலுார் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 1,008 அகல் விளக்கு பூஜைகளும் நடந்தன. வெள்ளி அலங்காரத்தில், சந்தனக்காப்பு வடிவத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.