சாலையை மறித்து வைத்துள்ள
சினிமா பேனர்; விபத்து அபாயம்
காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் மேம்பாலம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில், சாலையை மறித்து, சினிமா பேனர்களை வைத்துள்ளனர். இதனால், அவ்வழியே செல்வோர் போஸ்டரை பார்த்து செல்லும் சமயத்தில், பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்தும், நடந்து செல்வோர் மீது வாகனங்கள் மோதும் அபாயமும் உள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், அதில் சாலையை மறித்து பேனர்கள் வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் பட்டினி போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோணாம்பட்டி பஞ்.,ல், 14 கிராமங்கள் உள்ளன. இதில் காளிப்பேட்டையிலுள்ள ஒரு சமுதாயத்தை சேர்ந்த, 45 குடும்பங்களுக்கு அரசு, பட்டா வழங்கியது. சில மாதங்களுக்கு முன்பு, காமராஜ் என்பவர், தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அரசு பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பஞ்., நிர்வாகம் துண்டித்தது. மக்கள் போராட்டம் நடத்தியதால், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பின், எந்த நடவடிக்கையும் இல்லாததால், நேற்று காலை அச்சமுதாய மக்கள் காளிப்பேட்டையில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், அரூர் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) ராஜசேகரன், தாசில்தார் சுப்பிரமணி பேச்சுவார்த்தைக்கு பின், மாலை 5:30 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.
தரமில்லாமல் கல்வெட்டுகள்
அமைப்பதாக குற்றச்சாட்டு
சூளகிரி ஒன்றியம், அத்திமுகம் சந்தார்செட்டிப்பள்ளி சாலை முதல், எட்டிப்பள்ளிகுட்டா வரை, 6 கி.மீ., துாரத்திற்கு, 4.71 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த, 2022 அக்., 27ல் துவங்கியது. இதில் மொத்தம், 14 இடங்களில் மழைநீர் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே கல்வெட்டுகள் அமைக்கப்படுகின்றன. இதில் மூன்று கல்வெட்டுகள் தரமில்லாத டஸ்ட் மண் மற்றும் சிமென்டை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதால், தரமின்றி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக, பலவனபள்ளி, ஒட்டர்பாளையம், அத்திமுகம், ஆலுசாதனப்பள்ளி ஊர்மக்கள், சூளகிரி பி.டி.ஓ., கோபாலகிருஷ்ணனிடம் புகார் மனு கொடுத்தனர். அதன் பின்பும் கூட, இதுவரை தரமான முறையில் கல்வெட்டு பணி மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தால், கல்வெட்டுகள் தரமாக இல்லை என்பதை உறுதி செய்யலாம் என, மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. சாலை அமைக்கும் முன்பே, மாவட்ட நிர்வாகம் கல்வெட்டு பணிகளை ஆய்வு செய்து, தரமான முறையில் கல்வெட்டுகள் மற்றும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சாலை அமைத்த சில ஆண்டுகளில் மோசமாகி விடும் என, மக்கள் புலம்பி வருகின்றனர்.
சிறுமியை கடத்திய வாலிபரை
கைது செய்யக்கோரி மறியல்
பர்கூரை சேர்ந்த, 15 வயது சிறுமி நேற்று அதிகாலை வீட்டிலிருந்து மாயமானார். அவரது பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதில், பர்கூர் அடுத்த தபால்மேடு இந்திரா நகரை, சேர்ந்த டிரைவர் பிரேம்குமார், 22, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். அதன்படி போலீசார் விசாரித்தனர். போலீஸ் தன்னை தேடுவதையறிந்த பிரேம்குமார், நேற்று மாலை சிறுமியை பர்கூர் பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு ஓடி விட்டார். போலீசார் சிறுமியை மீட்டனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரேம்குமாரை உடனடியாக கைது செய்யக்கோரி, பர்கூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குவிந்தனர். பின் திடீரென சாலையின் குறுக்கே நின்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானப்பேச்சு நடத்தி கலைத்தனர்.
நமக்கு நாமே திட்டத்தில்
அரசு பள்ளிக்கு டி.வி.எஸ்., உதவி
ஓசூர் மாநகராட்சி, 36வது வார்டு அந்திவாடியில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் மற்றும் உணவு கூடம் அமைக்க, 48 லட்சம் ரூபாய் செலவாகும் என, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இப்பணியை நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளும் வகையில், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையிலிருந்து நிதியுதவி செய்யுமாறு, டி.வி.எஸ்., நிறுவனத்திடம் வார்டு கவுன்சிலர் பாக்கியலட்சுமி குப்புசாமி மற்றும்
அண்ணாதுரை ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மொத்த திட்ட மதிப்பிட்டில், 50 சதவீத தொகையான, 24.50 லட்சம் ரூபாயை, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில், அலுவலர் கமலகண்ணன் என்பவர், மாநகராட்சி கமிஷனர் சினேகாவிடம் வழங்கினார். கவுன்சிலர் பாக்கியலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து, இப்பணியை மேற்கொள்ள
மீதமுள்ள, 50 சதவீத தொகை அரசு சார்பில் ஒதுக்க உத்தரவிடப்பட்டது.
கல்யாண காமாட்சியம்மன்
கோவில் வருஷாபிஷேகம்
ஓசூர், பாரதிதாசன் நகரில் கல்யாண காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு மங்கள இசை, காலை, 9:00 மணிக்கு திருமுறை பாராயணம், கடம் புறப்பாடு, காலை, 10:00 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு, 108 தம்பதி பூஜை, 11:00 மணிக்கு நாட்டியாஞ்சலி விருது வழங்கும் நிகழ்ச்சி, 11:30 மணிக்கு மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆம்புலன்சில் வந்த தொழிலாளி மனு
தர்மபுரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, மனு கொடுக்க ஆம்புலன்சில் வந்த, பாலக்கோடு அடுத்த மூங்கில்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரகாஷ், 40, நிருபர்களிடம் கூறியதாவது:
நான் யாஷ்மின், 35, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மதம் மாறி திருமணம் செய்ததால், பெற்றோருக்கும் எனக்கும் அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டது. எனக்கு சேர வேண்டிய சொத்தை கேட்டு சென்றபோது, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடுமையாக தாக்கினர். காயமடைந்த நான், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கு சேர வேண்டிய சொத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அரூர் கடைவீதியில் கனரக
வாகனங்களால் நெரிசல்
அரூர் கடைவீதியில், ஜவுளிக்கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், எலக்ட்ரானிக்ஸ், மளிகை மற்றும் நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள்
அதிகளவில் உள்ளன. இதனால், கடைவீதி சாலையில் எப்போதும், மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். ஏற்கனவே, கடைவீதி சாலை குறுகலாக உள்ள நிலையில், ஆந்திரா, கர்நாடகா மற்றும் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள், அரூர் பைபாஸ் நான்கு வழிச்சாலையில் செல்லாமல், பஸ் ஸ்டாண்ட் வழியாக, கடைவீதி சாலையில் செல்கின்றன.
இதனால், கடைவீதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அரூர் கடைவீதி சாலையில், சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் நுழைவதை தடுக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாசனபுரம் வெங்கடரமண
சுவாமி கோவில் தேரோட்டம்
சூளகிரி அருகே, தாசனபுரத்தில், 400 ஆண்டுகள் பழமையான லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. ஓசூர் சப்கலெக்டர் சரண்யா, சூளகிரி
முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஹேம்நாத், தாசில்தார் பன்னீர்செல்வி மற்றும்
பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
சூளகிரி தாலுகா மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக தேரை இழுத்து சென்றனர். பின்னர் மீண்டும் தேர் நிலையை அடைந்தது. பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி
தரிசனம் செய்தனர். வரும், 30ல் எருது விடும் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்தா வெங்கடேஷ், தோரிப்பள்ளி பஞ்., தலைவர் பாப்பைய்யா மற்றும்
நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கற்கள் கடத்தல்
3 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி, கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள் ராயக்கோட்டை சாலையில், மூங்கில்புதுாரில் நேற்று முன்தினம், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்ற, 2 லாரிகளை
சோதனையிட்டதில் தலா, 2 யூனிட் உடைகற்களை கடத்தியது தெரிந்தது.
இது குறித்து அதிகாரி பொன்னுசாமி புகார்படி, தாலுகா போலீசார், 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். அதேபோல, கல்லுக்
குறுக்கி அருகே கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததிலும், கற்கள் கடத்தி சென்றது தெரிந்தது. அதிகாரி பொன்னுசாமி புகார்படி, மகராஜ
கடை போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
கணவர் கண்ணெதிரே
லாரி மோதி மனைவி பலி
கர்நாடகா மாநிலம், பெங்களூரு நாகர வள்ளியை சேர்ந்தவர் காமராஜ் மனைவி ராணி, 38; இவர், கிருஷ்ணகிரியில் உறவினரை பார்த்து விட்டு, கணவருடன் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் வீடு திரும்பினார்.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை சின்னாறு பகுதியில் இரவு, 7:30 மணிக்கு, பைக்கில் பெட்ரோல் தீர்ந்ததால், சின்னாறு யூ டர்னில், காமராஜ் பைக்கை தள்ளி கொண்டு சாலையை கடந்து சென்றார். அவருக்கு பின்னால் வந்த ராணி, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த லாரி, அவர் மீது மோதியதில், கணவரின் கண்ணெதிரே உடல் நசுங்கி பலியானார். சூளகிரி தாலுகா, கோனேரிப்பள்ளியை சேர்ந்தவர் முரளி, 35; இவர், நேற்று முன்தினம் மாலை, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கடையில், சிக்கன் வாங்கி கொண்டு, தன் நண்பருடன் சாலையை கடக்க முயன்றார். அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து வந்த பைக், மோதியதில், முரளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த இரு சம்பவம் குறித்தும், சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
பொதுமக்கள் குறை
தீர்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 376 மனுக்களை பெற்றுக் கொண்டார். டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக
உதவியாளர் வேடியப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காங்., கட்சியினர் உண்ணாவிரதம்
தர்மபுரி, மார்ச் 28-
லோக்சபா எம்.பி., பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், தர்மபுரி மாவட்ட, காங்., கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை வகித்தார். இதில், காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
தர்மபுரி, மார்ச் 28-
தர்மபுரி அடுத்த, நீலாபுரம் வாராஹி அம்மன் கோவிலில் நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் கணபதி, நவக்கிர ஹோமம், கங்கணம் கட்டுதல், பால்குடம் எடுத்தல் நடந்தது. பின், புதிய சிலைகளுக்கு பால் அபிஷேகம் நடந்தது.
மாலையில், விநாயகர் வழிபாடு, வருணபூஜை, வாஸ்துசாந்தி நடந்தது. இரவு யந்த்ர ஸ்தாபம், அஷ்டபந்தனம் சாத்துதல், தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 9:45 மணிக்கு இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.
சர்வதேச அபாகஸ் போட்டி
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ஊத்தங்கரை, மார்ச் 28-
சர்வதேச அபாகஸ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளிக்கும் விழா, ஊத்தங்கரையில் நேற்று நடந்தது. எம்.எஸ்.எம்., அகாடமியில் அபாகஸ் பயிற்சி பெற்ற, 35 மாணவர்கள், சென்னையில் நடந்த சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்கேற்று அனைவரும், 100 சதவீதம் வெற்றி பெற்றனர். அவர்களை, ஸ்டேட் பேங்க் மேனேஜர் ராஜகுமாரன், தலைமையாசிரியர் வீரமணி, டாக்டர் சுரேஷ் ஆகியோர் பாராட்டி
பரிசளித்தனர்.
பேட்டராய சுவாமி
தேர் கட்டும் பணி தீவிரம்
ஓசூர், மார்ச் 28-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பழமையான சவுந்தர்யவல்லி சமேத பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த, 19ல் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும், 4ல் காலை நடக்கிறது. இதையொட்டி, தேர்கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விழாவையொட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய, அனைத்துத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மொரப்பூர் ஸ்டேஷனில்
டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு
மொரப்பூர், மார்ச் 28-
அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று காலை, 10:45 மணிக்கு சேலம் டி.ஐ.ஜி., ராஜேஸ்வரி வந்தார். அங்கு பராமரிக்கப்படும் குற்றவாளிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் வழக்கு பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்து, வழக்குகளின் தன்மை குறித்து
போலீசாரிடம் கேட்டறிந்தார்.
மேலும், நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். பின், மொரப்பூர் அருகே வகுத்தானுாரில் கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை கூறிய வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்படும் என, நிருபர்களிடம் தெரிவித்தார். அரூர் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் வான்மதி ஆகியோர் உடனிருந்தனர். பின், 11:05 மணிக்கு டி.ஐ.ஜி., ராஜேஸ்வரி
புறப்பட்டுச் சென்றார்.
ரூ.8.30 லட்சம் ஏலச்சீட்டு
மோசடி; எஸ்.பி.,யிடம் புகார்
தர்மபுரி, மார்ச் 28-
ஏலச்சீட்டில், 8.30 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, தொப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ், தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அதில், அவர் தெரிவித்துள்ளதாவது: நல்லம்பள்ளி தாலுகா, பப்பிரெட்டியூர் காட்டுவளவை சேர்ந்தவர் கோபால். இவர் மாதாந்திர ஏல சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த, 2014ல் ஏலச்சீட்டில் சேர்ந்தேன். அவரிடம், 8.30 லட்சம் ரூபாய் செலுத்தினேன். அவர், நான் கட்டிய ஏலச்சீட்டுக்கான தொகையை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். அவரிடமிருந்து நான் கட்டிய சீட்டு தொகையை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.