ஈரோடு: கந்து வட்டி கேட்பதாக கூறி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பொம்மை வியாபாரி தீக்குளிக்க முயன்றார்.
அரச்சலுார், ஜே.ஜே.நகரை சேர்ந்த திருஷ்டி பொம்மை வியாபாரி குமார், 36; இவரது மனைவி மங்கம்மாள். இருவரும் தங்கள் மகன், மகளுடன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர்.
நுழைவுவாயிலில் நின்று கேனில் கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி, குமார் தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த சூரம்பட்டி போலீசார், கேனை பறித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதுகுறித்து குமார் கூறியதாவது:
குடும்ப சூழலுக்காக அதே பகுதியை சேர்ந்த காளியப்பன், மாதப்பன், படையப்பன் ஆகியோரிடம், 2.50 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றேன். மாதம் தோறும் வட்டியும், குறைந்த தொகையாக முதலும் செலுத்தி வந்தேன். ஆனால், வட்டியை மட்டும் வரவு வைத்து, முதலுக்கான செலுத்திய தொகையை வரவு வைக்கவில்லை. வட்டிக்கு, வட்டி, அபராத வட்டி என பல ஆயிரம் ரூபாய் கேட்டு, என்னை, குடும்பத்தாரை மிரட்டுகின்றனர். எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை. இவ்வாறு கூறினார். அவரையும், அவரது குடும்பத்தாரையும், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.