செல்லாண்டியம்மன் கோவிலில் பூச்சாட்டு
ஈரோடு, முனிசிபல் சத்திரத்தில் உள்ள, செல்லாண்டியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா, பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது.
விரதம் இருப்பவர்களுக்கு நாளை கங்கணம் கட்டுதல், ஏப்.,3ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 9ம் தேதி புனித நீர், பால்குடம் ஊர்வலம்; 10ம் தேதி அக்னி கபாலம் எடுத்து நகர்வலம்; ௧1ம் தேதி குண்டம் பற்ற வைத்தல் நடக்கிறது.
முக்கிய விழாவான தீ மிதித்தல், பொங்கல் வைபவம், 12ம் தேதி நடக்கிறது. இதை தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், அரிவாள் மீதேறி அருள்வாக்கு சொல்லுதல் நடக்கிறது. 13ம் தேதி மறுபூஜை, கும்பம் ஆற்றில் விடுதலுடன் விழா நிறைவடைகிறது.
மயிலம்பாடியில்
கும்பாபிஷேக விழா
பவானி அருகே மயிலம்பாடியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவிலில், மூன்றாண்டாக நடந்த புனரமைப்பு பணி முடிந்த நிலையில், கும்பாபிஷேக விழா திருப்பணிகள் தொடங்கின. கோவில் முன்பு யாக சாலைகள் அமைத்து, நான்கு கால பூஜைகள் நடந்த நிலையில், கோபுர கலசத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றி, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மயிலம்பாடி, பவானி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
காவிரியில் தண்ணீர் திருட்டு
நடவடிக்கை கோரி முறையீடு
ஜம்பை டவுன் பஞ்.,ல் ஆற்றில், தண்ணீர் திருடுவோர் மீது நடவடிக்கை கோரி, டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திராவிடம் அப்பகுதியினர் மனு வழங்கினர்.
மனு விபரம்: ஜம்பை டவுன் பஞ்.,க்கு உட்பட்ட பெரியமோளபாளையம் கிராமப்பகுதியில் கிணறு வெட்டி, காவிரி ஆற்று நீரை குழாய் மூலம் கொண்டு வந்து நிரப்புகின்றனர். சாலையை வெட்டி குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு சென்று கிராம பயன்பாடு, விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். சிலர் விற்பனையும் செய்கின்றனர். அரசு சார்பில் இப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்து, தொடர்புடையவர்கள் மீதும், இதற்கு உடந்தையான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
சமூகநீதி மக்கள் கட்சி
சார்பில் ஏப்.,2ல் மாநாடு
சமூகநீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூகநீதி மக்கள் கட்சி மற்றும் பொல்லான் பேரவை சார்பில், ஏப்.,2ம் தேதி, சமூகநீதி மாநாடு நடக்கிறது. துாய்மை பணியில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். கலப்பு திருமணம் செய்வோருக்கு உடனடியாக அரசுப்பணி வழங்க வேண்டும். ஆதிதிராவிட நலத்துறையை, சமூகநீதித்துறை என பெயர் மாற்ற வேண்டும். அருந்ததியர் சமூகத்துக்கு, 6 சதவீதம் தனி உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்படவுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
பச்சமலையில் நாளை
தேர் திருவிழா துவக்கம்
கோபி, பச்சமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திரத் தேர் திருவிழா, நாளை கிராம சாந்தியுடன் துவங்குகிறது.
மார்ச், 30ல் கொடியேற்றம், யாகசாலை பூஜை நடக்கிறது. அது முதல், ஏப்.,3ம் தேதி வரை, யாகசாலை பூஜை, பல்வேறு சிறப்பு வாகனத்தில் சுவாமி தேர்வீதி உலா நடக்கிறது. ஏப்.,4ல், காலை சண்முகருக்கு சிகப்பு சாத்தி அலங்காரம், கல்யாண சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏப்.,5ல் மகன்யாச அபிஷேகம், திருப்படி பூஜை, சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடக்கிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடக்கிறது.
மயங்கி விழுந்தவர் பலி
ஈரோடு, வீரப்பன்சத்திரம், சுப்ரமணிய நகர், இரண்டாவது வீதியை சேர்ந்த தொழிலாளி கணேசன், 30; ஆறு மாதங்களுக்கு முன் வயிறு முதல் தொடை வரை தோல் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தினமும் மது குடித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் மயங்கி கிடந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தானாக வனத்துக்குள் சென்ற மான்
திரும்பிய தீயணைப்பு துறையினர்
ஈரோடு, மாணிக்கம் பாளையம், மாரியம்மன் கோவில் பின்பகுதியில், ஒரு ஏக்கர் பரப்பு காலியிடத்தில் சீமை புற்கள், பல அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளது. இதன் மத்தியில் புள்ளி மான் இருப்பது மக்களால் கண்டறியப்பட்டது.
தகவலறிந்த வனத்துறை கார்டு நல்லசிவம் சென்றார். மான் இருப்பதை உறுதி செய்தார். நகருக்குள் மான் நுழைந்தால் தெருநாய்கள் கடித்து குதறிவிடும் என்பதால், வனப்பகுதிக்குள் அனுப்ப முயற்சித்தார். ஆனால் புள்ளி மான் மறைந்து கொண்டது. ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று மதியம் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் சென்றனர். தெருநாய்கள் தொடர்ந்து குரைத்ததால், புள்ளிமான் வெளியே வரவில்லை. ஒருவழியாக தேடும் பணியில் இறங்கியபோது, வனத்துக்குள் சென்றது.
சீமை புற்களுக்கு இடையே தென்பட்டது, பெண் புள்ளி மான்; ௧௦ வயதுக்கு மேல் இருக்கலாம் என்று, கார்டு நல்லசிவம் தெரிவித்தார்.
காஸ் அடுப்பில் பழுது பார்த்த போது தீ மூவர் படுகாயம்
காஸ் அடுப்பில் பழுது பார்த்தபோது ஏற்பட்ட தீ விபத்தில், தாய், மகள் உள்பட மூன்று பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
பவானி மண் தொழிலாளர் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் ரேவதி, 25; கட்டட தொழிலாளி. தாயார் லட்சுமியுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில், சமைப்பதற்காக பற்ற வைத்தபோது, காஸ் அடுப்பு எரியவில்லை. இதனால் பக்கத்து வீட்டை சேர்ந்த, எலக்ட்ரீசியன் கணேசன், 35, என்பவரை அழைத்துள்ளனர். அவர் சரி செய்து கொண்டிருந்த போது, டியூப்பில் இருந்து காஸ் கசிந்துள்ளது. ஆனால், சிலிண்டரில் இருந்து காஸ் வருவதாக நினைத்து, அடுப்பை பற்ற வைத்துள்ளனர். இதில் தீ விபத்து ஏற்பட்டு, மூவரும் படுகாயம் அடைந்தனர். பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசைத்தறி பயிற்சிக்கு
விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் விசைத்தறி சேவை மையம், ஈரோடு, சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலியில் செயல்படுகிறது.
அங்கு விசைத்தறி பயிற்சி அளிக்க தேவையான சாதா விசைத்தறிகள், டாபி, டெர்ரி தறிகள் நிறுவப்பட்டுள்ளன. ஜவுளித்துறையை மேம்படுத்தும் வகையில் ஒரு மாத விசைத்தறி பயிற்சி வகுப்பு ஏப்., 10 ல் துவங்க உள்ளது. நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை விசைத்தறி சேவை மைய உதவி இயக்குனர் ராஜா தெரிவித்துள்ளார்.
இளைஞர் மன்றத்தினர்
பரப்புரை பயணம்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். காலிப்பணியிடங்களை அரசு முழுமையாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், மாநில அளவில் தொடர் பரப்புரை பயணம் நடந்து வருகிறது. மாநில செயலாளர் பாரதி தலைமையிலான பரப்புரை பயண குழுவினர், ஈரோடு வந்தனர்.
கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே, தெற்கு மாவட்ட இளைஞர் மன்ற பொறுப்பாளர் பிரபு தலைமையில் வரவேற்பு அளித்தனர். வீரப்பன்சத்திரம், சூளை, மாணிக்கம்பாளையம், சம்பத் நகர், சூரம்பட்டி நால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று பிரசாரம் செய்தனர்.
உக்கிர காளியம்மன்
கோவில் கும்பாபிஷேகம்
தாராபுரம் அருகே நடந்த உக்கிர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
தாராபுரத்தை அடுத்த கொங்கூரில், சவுந்தரநாயகி சமேத பசுபதீஸ்வர சுவாமி மற்றும் உக்கிர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை வெகு விமரிசையாக நடந்தது. நடராஜ சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். பிச்சை சிவாச்சாரியார் உள்பட திரளான ஆன்மிக பெரியோர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
சோலார் மின் திட்டம்
அமைச்சர்கள் துவக்கம்
தாராபுரம் அருகே, சூரிய ஒளி மின் திட்டத்தை, அமைச்சர்கள் நேற்று துவக்கி வைத்தனர்.
தாராபுரம், குமாரபாளையம், வடுகபட்டியில், 110 ஏக்கரில் நிறுவப்பட்ட, தனியார் துணை மின் நிலையம் மற்றும் 25 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி நேற்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மண்டல மின்வாரிய முதன்மை பொறியாளர் வினோதன் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
நேற்று 5 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக ஐந்து பேருக்கு உறுதியானது. ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களில் ஒருவர் குணமடைந்தார். தற்போது, 12 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
வந்தே பாரத் ரயில் நேரத்தை
மாற்றி இயக்க வலியுறுத்தல்
கோவையில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நேரத்தை மாற்றி அமைக்க, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் பாஷா, அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது: கோவையில் இருந்து வந்தே பாரத் ரயில் (எண்: 20644) வரும் ஏப்., 8 காலை, 6:00 மணிக்கு புறப்படுகிறது. திருப்பூரில்-6.30 மணி, ஈரோட்டில்-7:17, சேலத்தில்-8:08, சென்னையை-12.10 மணிக்கு சென்றடைகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம் தவிர எங்கும் நிற்பதில்லை.
இந்த ரயில் இயக்கத்துக்கு முன் கோவையில் இருந்து இன்டர்சிட்டி காலை, 6:15 மணி; வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் காலை, 7:25 மணிக்கும் இயக்கப்படுகிறது. இதற்குப்பின் மதியம், 12:00 மணிக்கு, டாடா தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் இருந்து சென்னை வழியாக செல்கிறது. சில நிமிட இடைவெளியில் தொடர்ந்து மூன்று ரயில்களை இயக்கும் நிலையில், வந்தே பாரத் ரயில் புறப்படும் நேரத்தை காலை, 6:00 மணிக்கு பதில் காலை, 9:00 அல்லது, 10:00 மணிக்கு இயக்கினால் மக்கள் கூடுதல் பயன் பெறுவர். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு
பாராட்டு விழா
ஈரோடு எஸ்.கே.சி., ரோடு, மாநகராட்சி நடுநிலை பள்ளியில், கலை திருவிழா நடந்தது. இதில் பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் மேகலா தேவி, மாணவர்களை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்கினார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு, வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார். உதவி ஆசிரியை மல்லிகா நன்றி கூறினார்.
அரசு கல்லுாரியில்
நாட்டுப்புற கலை விழா
காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ்த்துறை சார்பில் நாட்டுப்புற கலை விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் நசீம்ஜான் தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் தேவராஜு முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் மகேஸ்வரி வரவேற்றார்.
உடுமலை கா.சீதாராமன், உடுமலை சிவா குழுவினர், கதைப்பாடலின் வகைகள் மற்றும் அதன் அமைப்பு குறித்து விளக்கினர். கொங்கு நாட்டில் புகழ்பெற்ற பொன்னர் சங்கர் கதைப்பாடல், அதன் சிறப்புகளை கூறி, கிளி பிடித்தல் என்ற பகுதியை நிகழ்த்தி காட்டினர். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் விழாவில் கலந்து கொண்டனர்.
சிவிங்கி புலி
பரிதாப பலி
நம் நாட்டில் சிவிங்கி புலி இனத்தை பெருக்கும் நோக்கில், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிவிங்கி புலிகள், கடந்த ஆண்டு செப்., 17ல் வரவழைக்கப்பட்டன.
இவற்றை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
சமீபத்தில், ஒரு பெண் சிவிங்கிப் புலிக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அந்த சிவிங்கி புலி பரிதாபமாக உயிரிழந்தது.
காங்., சார்பில் போராட்டம்
ராகுலின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, காங்., கட்சியினர், தாராபுரத்தில்
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய நகராட்சி அலுவலகம் முன், நடந்த போராட்டத்துக்கு, காங்., மாவட்ட தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். இதில் தி.மு.க., - வி.சி., மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். ராகுல் எம்.பி., பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, கூட்டணி கட்சியினர் உரை நிகழ்த்தினர். நகர காங்., தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.