கரூர்: கரூர் மாவட்டத்தில், போலீசார் நடத்திய சிறப்பு ரோந்து பணியில், 2,044 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் அதிகாலை வரை, போலீசார் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாகன சோதனையில், 2,044 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக, 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், வேலாயுதம்பாளையம் அருகே தவிட்டுப்பாளையம் பகுதியில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட, 103 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், குட்கா பொருட்கள் தொடர்பாக நடந்த சோதனையில், 27 பேர் கைது செய்யப்பட்டு, ஆறு கிலோ, 682 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்ற வகையில், 18 பேர் கைது செய்யப்பட்டு, 233 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.