கரூர்: பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், 2.91 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை கலெக்டர் வழங்கினார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. இதில், 587 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட, கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், உடனடி நடவடிக்கையாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 5 பேருக்கு காதொலி கருவி, சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான கண்ணாடி, ஊன்றுகோல் உள்பட, 21,447 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 20 பயனாளிகளுக்கு, தலா 6,000 ரூபாய் மதிப்பில் மொத்தம், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்கள், கூட்டுறவுத்துறை சார்பில் மைலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு, தலா, 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளாடு வளர்ப்பு கடன் உள்பட 28 பயனாளிகளுக்கு, 2.91 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., லியாகத், கூட்டுறவு சங்ககளின் இணை பதிவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், சப் - கலெக்டர் சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் காமாட்சி உள்பட பலர் பங்கேற்றனர்.