குளித்தலை: குளித்தலை அருகே, சின்னையம்பாளையம் பஞ்., ஈச்சம்பட்டி கிராம மக்களுக்கு சொந்தமான, பசிபேரிநாயக்கர் மந்தையின் 'சலை எருது' என, அழைக்கப்படும் 35 வயது, கோவில் காளையை பொதுமக்கள் பராமரித்து வந்தனர்.
இந்த காளையானது, இப்பகுதியில், 90க்கும் மேற்பட்ட மாலை தாண்டும் போட்டியில் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று, சிறந்த காளையாக திகழ்ந்தது.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் காலை, கோவில் காளை இறந்தது. இதுகுறித்து திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 14 மந்தைகாரர்களுக்கு ஈச்சம்பட்டி மந்தை சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. அவர்களும், இங்கு வந்து கோவில் காளைக்கு புத்தாடை, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின், பாரம்பரிய தேவராட்டம், கும்மிபாடல், ஒப்பாரி, உருமி, தப்பாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் குலவழக்கப்படி காளை அடக்கம் செய்யப்பட்டது.