நாமக்கல்: 'போலீசார் விசாரணை என்ற பெயரில், மக்களை அழைத்து அச்சுறுத்துவதிலிருந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ப.வேலுார் தாலுகா, ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கரப்பாளையத்தை சேர்ந்த விவேகானந்தன் மனைவி நித்யா; பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, குற்றவாளி கைது செய்யப்பட்ட பின், பொதுமக்கள் அவரவர் வேலைகளை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு கரும்பு ஆலை கொட்டகை எரிப்பு தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதையடுத்து, மர்மமான முறையில் கரும்பு ஆலைகள் தீயிடப்பட்டதாக கூறி, போலீசார் எவ்வித குற்றப்பின்னணியும் இல்லாத பொதுமக்களையும், போராட்டத்துக்கு சென்றவர்களையும், விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டி வருகின்றனர். அதன் காரணமாக, பொதுமக்களும், இளைஞர்களும் வீட்டைவிட்டு வெளியில் வரவோ, வழக்கமான பணிகளுக்கு செல்லவோ முடியாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
அதனால், சாதாரண பொதுமக்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து அலைக்கழித்து அச்சுறுத்தல் செய்வதில் இருந்து பாதுகாப்பு வழங்கி, மக்கள் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.