நாமக்கல்: கலெக்டர் அலுவலகம் முன், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் அடுத்த நரவலுாரை சேர்ந்தவர் அமலா, 25; இவர், நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன், கூல்டிரிங்ஸ் பாட்டிலில், குருணை மருந்தை கலக்கி குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அமலாவை காப்பாற்றி அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது:
எனது முதல் கணவர் நோயால் பாதிக்கப்பட்டதால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். அதையடுத்து, ராஜேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். தற்போது நான், மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறேன். இந்நிலையில், என் மாமியாரும், அவரது ஆண் நண்பரும் சேர்ந்து, என்னை அடித்து துன்புறுத்துகின்றனர். மேலும், அந்த ஆண் நண்பர் என்னை தவறான தொடர்புக்கு அழைக்கிறார்.
மேலும், வயிற்றில் உள்ள குழந்தை என்னுடையது இல்லை. அதனால், அவற்றை கலைத்துவிடும்படி, கணவர் ராஜேஷூம் அடிக்கிறார். வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால், என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை ஒதுக்கி வைத்துவிட்டனர். அதனால், சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுகிறேன். இதுகுறித்து, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, அந்த இளம்பெண்ணை, போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன், பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.