வேலுார்:வேலுாரில் கணக்கில் வராத, 1.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலுார் கலெக்டர் அலுவலகம் அருகில், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில், ஊராட்சி உதவி இயக்குனர் தணிக்கை பிரிவு அலுவலகம் உள்ளது.
மாவட்டத்தின் ஏழு ஒன்றியங்களில், 2013 முதல் நடந்து வரும், நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் குறித்த தணிக்கை நடந்தது.
இதில், ஊராட்சி செயலர்களிடம், 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று, தணிக்கை சான்றிதழ் வழங்கி வருவதாக, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சில நாட்களுக்கு முன் நடத்திய சோதனையில், 1.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அந்த தொகை ஊராட்சி செயலர்களிடம் லஞ்சமாக பெற்றது தெரிந்தது.
இதையடுத்து, உதவி இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட சமூக தணிக்கை குழு உதவி திட்ட அலுவலர் வசுமதி, மாவட்ட வள அலுவலர் மணிமாறன், ஊராட்சி செயலர்கள் மசிகம் ஆறுமுகம், பத்தலப்பல்லி மணிவண்ணன், துத்திக்காடு ஊராட்சி துாய்மை பணியாளர் திருமலை ஆகிய ஆறு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.