திருப்பத்துார்:''மதுவிலிருந்து இளைஞர்களை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
இது குறித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியதாவது:
தமிழகத்தில் அதிகளவிலான போதை பொருட்கள் விற்பனை, போலீசாருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. கொரோனாவுக்கு பிறகுதான் மது விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க, 17 ஆயிரம் போலீசார், ஒரு டி.ஜி.பி.,என உருவாக்கப்பட வேண்டும்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெண்கள் அதிக போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.
இந்தியாவிலேயே சாலை விபத்து அதிகம் நடக்கும், அதிக விதவைகள் இருக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது.
இந்தியாவிலேயே அதிக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அதிக தற்கொலை நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இதற்கு காரணம் மது. தற்போது மதுக்கடைகள், பார்கள் அதிகரித்துள்ளது.
மது ஒழிப்புதான் அண்ணாதுரை, ஈ.வெ.ரா.,வின் கொள்கை. தி.மு.க., அவர்களுடைய கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடையை படிப்படியாக குறைப்போம் என, மேடைக்கு மேடை பேசிய, தி.மு.க., தற்போது ஒரு கடையை கூட மூடவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின், மதுவிலிருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.