பெரும்பாக்கம், பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நன்னீர் குளம், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், குளத்தில் உள்ள பாசியை நீக்கி, கழிவு நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மேடவாக்கத்திலிருந்து சோழிங்கநல்லுார் செல்லும் செம்மொழி சாலையில், மாதா கோவில் சந்திப்பு உள்ளது.
இங்கிருந்து பெரும்பாக்கம் செல்லும் பிரதான சாலை துவங்குகிறது. இந்த சாலையில், பழண்டியம்மன் கோவில் அருகே மூன்று ஏக்கர் பரப்பளவில் நன்னீர் குளம் உள்ளது.
இந்த குளம் கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஐந்து ஏக்கர் பரப்பளவில், 10 அடி ஆழமுள்ளதாக இருந்தது. பின்னர், கடந்த 1990க்குப் பிறகு, பல்வேறு ஆக்கிரமிப்புகள் காரணமாக, குளத்தின் இரண்டு ஏக்கர் நிலம் கபளீகரம் செய்யப்பட்டது.
இதனால், தற்போது, மூன்று ஏக்கருக்கும் குறைவான பரப்பளவுக்கு சுருங்கி விட்டது.
முன்பெல்லாம், மழைக் காலங்களில் தெருக்களில் வழிந்தோடும் நீர், இந்தக் குளத்திற்கு வந்து தேங்கும்.
இதனால், குளத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகரித்து இருந்தது.
10 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தது. குளத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் விவசாயம் அமோகமாக நடந்தது.
தற்போது, மழை நீர் வரும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன. எனவே, மழை நீர் குளத்தில் தண்ணீர் தேங்க தடைகள் உள்ளன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த குளம் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டால், அதன் வாயிலாக தனிப்பட்ட லாபத்தை அடையலாம் என்ற நோக்கத்தோடு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதி அரசியல்வாதிகள், ஊராட்சி நிர்வாகிகள் குளத்தை சீரமைக்காமல், அப்படியே விட்டு விட்டனர்.
இதனால், குளத்தைச் சுற்றிலும் குப்பை கொட்டப்பட்டு, வேலிக்காத்தான் உள்ளிட்ட செடிகள் வளர்ந்துள்ளன.
தற்போது, குறைவாக தேங்கியுள்ள தண்ணீரில் பாசி படர்ந்து, குளம் அவல நிலையில் உள்ளது.
மேலும், அருகிலுள்ள வீடுகளின் கழிவு நீரும், இரவு நேரங்களில் கழிவு நீர் லாரிகளும், இந்த குளத்தில் கழிவு நீரை கொட்டுவது வாடிக்கையாக உள்ளது.
குளத்தை சீரமைத்து, மீண்டும் நன்னீர் குளமாக மாற்றிட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்த நன்னீர் குளத்தின் மீது கருணை காட்டி, உரிய நடவடிக்கை எடுத்து, புதுப்பொலிவுடன் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.