செம்பாக்கம்,தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டல குழு கூட்டம், ஐந்து மாதங்களுக்குப் பிறகு, நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தை, தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட, ஏழு பேர் புறக் கணித்தனர். 'மண்டலத்தில் பிரச்னைகள் இருந்தாலும், அனைத்து கவுன்சிலர்களை அழைத்து பேசி, கூட்டம் நடத்த வேண்டும்' என, கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டல குழு கூட்டம், மண்டல தலைவர் பிரதீப் தலைமையில், நேற்று நடந்தது. இதில், 14 கவுன்சிலர்களில் 4 சுயேச்சை, தலா ஒரு அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., கவுன்சிலர் என, மண்டல குழு தலைவருடன் சேர்த்து, ஏழு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட ஏழு பேர், மண்டல குழு தலைவரை கண்டித்து, கூட்டத்தை புறக்கணித்தனர்.
இந்த மண்டலத்தில், அமைச்சர் அன்பரசன்- - தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா கோஷ்டிகளிடையே உச்சக்கட்ட பூசல் நிலவி வருகிறது.
சுயேச்சை மண்டல குழு தலைவரான பிரதீப், எம்.எல்.ஏ., ராஜா கோஷ்டியை சேர்ந்தவர்.
அதனால், அமைச்சர் அன்பரசன் கோஷ்டியைச் சேர்ந்த கவுன்சிலர்களை மதிப்பதில்லை. அவர்களின் வார்டுகளில் எந்த வேலையும் செய்வதில்லை என்ற புகார் தொடர்ந்து இருந்து வருகிறது.
இதன் காரணமாக, ஐந்து மாதங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.
''இதில், எங்கள் வார்டில், என்ன பிரச்னை உள்ளது என்பதை, மண்டல குழு தலைவர் இதுவரை கேட்டதே இல்லை. மண்டலத்தில் பிரச்னைகள் இருந்தாலும், கவுன்சிலர்களை அழைத்து பேசியதே இல்லை,'' என, 35வது வார்டு கவுன்சிலர் சங்கீதா குற்றம் சாட்டினார்.
அதற்கு, ''என்னிடம், உங்களுடைய மொபைல் போன் எண் இல்லை,'' என, மண்டல குழு தலைவர் பிரதீப் அளித்த பதில், வேடிக்கையாக இருந்தது.
தொடர்ந்து, குப்பை முறையாக எடுப் பதில்லை. மழைநீர் பாதிப்பு உள்ள பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் சிறுபாலம் கட்ட வேண்டும். ஒட்டுப் பணி நடந்த சாலைகள் மீண்டும் சேதமடைந்து விட்டன.
தரமற்ற முறையில் பணி செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்சாலைகள் போட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை கவுன்சிலர்கள் முன்வைத்தனர்.