அண்ணா நகர், கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ், 75. இவர், மருத்துவ பரிசோதனைக்காக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, தன் 'போக்ஸ்வேகன்' காரில் சென்று, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.
கீழ்ப்பாக்கம் கார்டன் வழியாக சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சின் மீது மோதியது. இதனால், ஆம்புலன்ஸ் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், டி.பி.,சத்திரம் பகுதியை சேர்ந்த ராஜி, 57, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஹேமலதா, 26, ஆட்டோ ஓட்டுனர் பாபு, 47, ஆட்டோவில் பயணித்த கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பிரதாப் 27, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் செந்தில் கணேஷ், 47, உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து ஏற்படுத்திய தாமஸ் மீது வழக்கு பதிந்து, அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.