பெரும்பாக்கம் பெரும்பாக்கம், எழில் நகரை சேர்ந்த சந்திரசேகர், சத்யா தம்பதியினர், நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, மொபைல் போனை தவறவிட்டனர்.
இது குறித்து, பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், அதே பகுதியில், துாய்மை பணியில் ஈடுபட்டிருந்த, மடிப்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த மகாலட்சுமி என்பவர், சாலை ஓரம் விலை உயர்ந்த மொபைல் போன் கிடப்பதை பார்த்து, அதை எடுத்து, பெரும்பாக்கம் காவல் நிலையம் சென்று, உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி கொடுத்தார்.
பின்னர், மொபைல் போனை தவற விட்ட தம்பதியினரை வரவழைத்த போலீசார், அவர்களிடம் உரிய அடையாளம் பெற்று, 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன், அவர்களுடையது என்பதை உறுதி செய்து, ஒப்படைத்தனர். துாய்மைப் பணியாளர் மகாலட்சுமியை, போலீசார் பாராட்டினர்.