திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே கல் குவாரியில் இருந்து அதிவேகமாக சென்ற லாரி மோதியதில், 'டூ - வீலரில்' சென்ற ஆசிரியை இறந்தார். இதை கண்டித்து கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
இம்மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் ராதாபுரம் சட்டசபை தொகுதிக்குள் உள்ளன. இங்கிருந்து கேரளாவுக்கு அதிக அளவில் பாறாங்கற்கள், ஜல்லி கற்கள் லாரிகளில் அனுப்பப்படுகின்றன.
நேற்று காலை 8:00 மணிக்கு சீலாத்திகுளத்தில் இருந்து கற்களை ஏற்றிக் கொண்டு கனரக லாரி முடவன்குளம் நோக்கி சென்றது.
அந்த பகுதியில் டூ - வீலரில் வந்த, தெற்கு ஆறுபுளி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி ஆசிரியை மாதவி, 48, மீது மோதியதில், அவர் லாரி டயருக்குள் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார்.
லாரி டிரைவர் ஜேசுராஜன், 25, கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து சுற்றியுள்ள கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
வள்ளியூர் அருகே அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்த மாதவி, திசையன்விளை அருகே ரம்மதாபுரத்தில் இரண்டு மகள்கள், மகனுடன் வசித்து வந்தார். இவரது கணவர், சில மாதங்களுக்கு முன் வாகன விபத்தில் இறந்தார்.
அடிக்கடி உயிர்ப்பலி
ராதாபுரம், இடிந்தகரை பகுதி கல் குவாரிகளில் இருந்து செல்லும் அதிவேக வாகனங்கள் மோதி அடிக்கடி பலர் உயிரிழப்பது தொடர்கிறது.
பள்ளி, அலுவலகங்கள் துவங்கும் காலை 8:00 முதல் 9:30 மணி, முடியும், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை கனரக வாகனங்கள், கல் குவாரி லாரிகள் இயங்க தடை விதிக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.