ஆம்பூர்:ஆம்பூர் அருகே, கிணற்றில் விழுந்த இரண்டு கரடிகளை, வனத்துறையினர் மீட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் அருகே, அரங்கல் துருகம் வனப்பகுதியை ஒட்டி, சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. நிலத்தில், 50 அடி ஆழ கிணறு உள்ளது.
புதர் மண்டி மூடிக்கிடந்த கிணற்றில், நேற்று முன்தினம் மதியம், இரண்டு கரடிகள் விழுந்து விட்டன.
தகவலின்படி ஆம்பூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்தனர். கரடிகளை மீட்கும் முயற்சியாக, புதரை அகற்றினர்.பின் 'பொக்லைன்' இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, சாய்தள பாதை அமைத்தனர். பனைமரத்தை, சாய்தள பாதை வழியாக கிணற்றுக்குள் இறக்கினர்.
அதே சமயம் சோர்ந்து போன கரடிகளுக்கு உணவு தரப்பட்டது. அதை சாப்பிட்ட நிலையில், தெம்பு கிடைக்கவே, கரடிகள் எழுந்து நின்றன.
இதையடுத்து கயிறு கட்டி நள்ளிரவில் மீட்டனர். அருகிலுள்ள வனப்பகுதியில் இரு கரடிகளும் விடப்பட்டன.