திருநெல்வேலி:மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறை ஊழியர்களை ஒருமையில் பேசி மிரட்டிய தி.மு.க., பேரூர் செயலர் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாகத் தான் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிக்கு செல்ல முடியும்.
மார்ச், 25 காலை ஆந்திரா மற்றும் தமிழக பதிவெண் கொண்ட இரு வாகனங்களில் சுற்றுலா செல்ல சிலர் வந்தனர்.
அதில், ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனத்திற்கு மட்டும் அனுமதி சீட்டு பெற்றிருந்தனர்.
எனவே, இன்னொரு வாகனத்தை அனுமதிக்க முடியாது என, சோதனை சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.
அந்த வாகனத்தில் வந்த, மணிமுத்தாறு கீழ ஏர்மாள்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., பேரூர் செயலர் முத்துகணேஷ் என்பவர், வாகனத்தை அனுமதிக்குமாறு கட்டாயப்படுத்தி, வனக்காப்பாளரை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின், இரு வாகனங்களையும் மாஞ்சோலை எஸ்டேட்டிற்கு அனுமதித்தனர். உள்ளே செல்லும் வாகனங்கள் மாலை 6:00 மணிக்குள் திரும்ப வேண்டும் என்பது வனத்துறை விதி. ஆனால், வாகனங்கள் இரவு 8:30 மணிக்கு தான் திரும்பி வந்தன.
இரு வாகனங்களுக்கும் தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், 50 ஆயிரம் ரூபாயை வனத்துறையினர் அபராதம் விதித்தனர். அப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முத்துகணேஷ், ஒரு கட்டத்தில் 'அடக்கி வாசித்து' வனத்துறை காப்பாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுப்பதாக கூறி சென்றார்.
ஆனால், அவர் இன்று வரை மன்னிப்பு கடிதம் கொடுக்கவில்லை என புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறினார்.