துாத்துக்குடி:துாத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி முதல் தாசில்தார் வரை பிறப்பு இறப்பு சான்றிதழ் முதல் போலீஸ் ஸ்டேஷன் ரசீது வரை அனைத்தையும் போலியாக தயார் செய்து வழங்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் வந்தியத்தேவன் 64. இவரது உறவினருக்கு சொந்தமான நிலத்திற்கான கிரைய ஆவணம் தொலைந்துவிட்டது. போலீசில் புகார் செய்து புதிய ஆவணம் பெறுவதற்காக அதே பகுதியை சேர்ந்த மகாராஜன் என்பவரை அணுகினார்.
மகாராஜன் தூத்துக்குடி சுப்பையா முதலியார் புரத்தில் வசிக்கும் பெருமாள் 54, என்பவரதுவீட்டிற்கு அழைத்துச் சென்றார். போலீஸ் ஸ்டேஷனில் புகார் பெற்றுக் கொண்டு தருவது போல மனுரசீது வழங்கினர். பின்னர் ஆவணம் தொலைந்ததற்கான சான்றிதழ் வழங்குவதற்கு காத்திருக்க செய்தனர். இதற்காக 30 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டனர். போலீஸ் ஸ்டேஷன் சான்றிதழ் பெறுவதற்கு பெருமாள் வீட்டுக்கு சென்றிருந்த போது அங்கு அவரது நண்பர்கள் 5 பேர் இருந்தனர்.
அங்கு கிராம நிர்வாக அலுவலர், வீட்டு வரி ரசீது, நத்தம் பட்டாக்கள், மருத்துவமனை வழங்கப்படும் பிறப்பு இறப்பு சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் கிராம கணக்குகள், அடங்கல் கணக்கு, தாசில்தார் சான்றிதழ் என அனைத்தையும் அவர்களே போலியாக கம்ப்யூட்டரில் தயார் செய்து, போலியான ரப்பர் ஸ்டாம்புகள் மூலம் முத்திரை வைத்து தருவது தெரியவந்தது.
இதுகுறித்து வந்தியத்தேவன் தூத்துக்குடி தென் பாகம் போலீசில் புகார் செய்தார். எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் விசாரித்தார்.
பல்வேறு சான்றிதழ்களை கம்ப்யூட்டரில் தயார் செய்து போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையிட்டு தந்த புதியம்புத்தூர் பொன்ராஜ் 66, மறவன்மடம் கிறிஸ்டோபர் 56, சிலுவைபட்டி இம்மானுவேல் 50, ரஹ்மத்துல்லாபுரம் காளீஸ்வரன் 61, புஷ்பா நகர் அசோகர் 65 ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 80க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்புகள்பறிமுதல் செய்யப்பட்டன.இந்திராநகர் மகாராஜன், பெருமாள் மற்றும் கம்ப்யூட்டரில் சான்றிதழ் தயாரித்து தந்த இருவரை தேடி வருகின்றனர்.