சென்னை :சென்னை மாநகராட்சியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சொத்து வரி செலுத்தாமல் இருப்போருக்கு, ஒரு முறை வாய்ப்பாக, செலுத்த வேண்டிய தொகையில் 20 சதவீதம் சலுகை வழங்குவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், 'மொபைல் போன்'
கோபுரங்கள் வரன்முறை செய்யப்பட்டு, சொத்து வரி வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.இதைதொடர்ந்து, மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மாதந்திர கவுன்சில் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. அப்போது, 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் இருப்போருக்கு 20 சதவீதம் வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை மாநகராட்சியில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, 44 ஆயிரத்து, 436 சொத்து உரிமையாளர்கள், 245 கோடி ரூபாய் வரி நிலுவை
வைத்துள்ளனர்.
இதில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், மாநகராட்சிக்கு வரி நிலுவைத்தொகை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, ஒருமுறை சிறப்பு நிகழ்வாக, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சொத்து வரி நிலுவை வைத்துள்ளோர், மூன்று மாதத்திற்குள் முழு நிலுவைத்தொகையையும் செலுத்தினால், 20 சதவீதம் வரி சலுகை வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு அரையாண்டின் துவக்கத்தில் முறையாக சொத்துவரி செலுத்துவோருக்கும், 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் 5,000 ரூபாய் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
யூனியன் பிரதேசமான சண்டிகர் நிர்வாகம், 30 சதவீதம் சலுகை அனுமதி அளித்து, சொத்துவரியை வசூலிக்கிறது.இவற்றை பின்பற்றி, சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் இருப்போருக்கு, ஒருமுறை சலுகை வழங்கப்பட உள்ளது. சொத்து வரி நிலுவை முழு தொகையை ஒரே நேரத்தில் செலுத்தும்பட்சத்தில், 20 சதவீதம் வரி சலுகை கிடைக்கும். தவணை முறையில் செலுத்துவோருக்கு சலுகை கிடைக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட மேலும் சில முக்கிய தீர்மானங்கள்:
* சென்னையில் புதிதாக மொபைல் கோபுரம் அமைக்கவும் மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்ட மொபைல்போன் கோபுரங்களையும், வரன்முறை செய்து, அதன் மீது சொத்துவரி வசூலிக்கப்படும்
* மெரினா காமராஜர் சாலையையும் - அண்ணா சாலையையும், அவ்வை சண்முகம் சாலை இணைக்கிறது.
இந்த சாலையில் மெரினாவில் இருந்து ராயப்பேட்டை இந்திய வங்கி தலைமை அலுவலகம் வரை உள்ள பகுதியை தமிழக அரசு முன்னாள் தலைைம வழக்கறிஞர் வி.பி.ராமன் நினைவாக வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்றம் செய்ய அனுமதி அளித்தல், உள்ளிட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.