பொள்ளாச்சி:''தமிழகத்தில் ஆன்மிகத்தின் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது,'' என, ரிஷிகேஷ் சுவாமி தயானந்தா ஆசிரமம் தலைவர் பூஜ்யஸ்ரீ சாக் ஷாத் க்ருதாநந்த சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் மற்றும் சனிப்பெயர்ச்சி யாக விழா நேற்று துவங்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிஷிகேஷ் சுவாமி தயானந்தா ஆசிரமம் தலைவர் பூஜ்யஸ்ரீ சாக் ஷாத் க்ருதாநந்த சரஸ்வதி சுவாமிகள், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஆன்மிகத்தின் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அது அனைவரின் உயிர் நாடியாக உள்ளது. சில இடையூறுகள் வரலாம். ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டே இருப்பதால் தடைகள் நீங்கிவிடும். தமிழகத்தில் தான் கோவில்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று இல்லை. கும்பாபிஷேகம், சிறப்பு முற்றோதல், ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருப்பதால், நமது கலாசாரம் அழியாமல் புதுப்பித்துக் கொண்டே இருக்கும். கோவில்களுக்கு அரசு ஒன்றும் செய்யாமல் இருந்தால் போதும்.
அதேநேரத்தில் அரசு ஒன்று செய்ய வேண்டும்; கோவில் நிர்வாகத்தை அந்தந்த நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும். பக்தர்கள் பலர் நன்றாக பராமரிக்க தயாராக உள்ளனர். கோவில்களை நிர்வாகிகளிடம் ஒப்படைப்பது சமுதாயத்துக்கும் நல்லது.
இவ்வாறு, அவர் கூறினார்.