திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறை ஊழியர்களை ஒருமையில் பேசி மிரட்டிய தி.மு.க., பேரூர் செயலாளர் முத்துகணேஷ் மன்னிப்பு கடிதம் தரவில்லை என வனத்துறை அதிகாரி புலம்பல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாகத்தான் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிக்கு சுற்றுலா செல்ல முடியும். மார்ச் 25 காலை ஆந்திரம் மற்றும் தமிழக பதிவெண் கொண்ட 2 வாகனங்களில் சுற்றுலா செல்ல சிலர் வந்தனர். அதில் ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனத்திற்கு மட்டும் அனுமதி சீட்டு பெற்றிருந்தனர். எனவே இன்னொரு வாகனத்தை அனுமதிக்க முடியாது என சோதனை சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.
அந்த வாகனத்தில் வந்த மணிமுத்தாறு கீழ ஏர்மாள்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., பேரூர் செயலாளர் முத்துகணேஷ் வாகனத்தை அனுமதிக்குமாறு கட்டாயப்படுத்தியதோடு வனக்காப்பாளரை ஒருமையில் பேசி மிரட்டினராம். பின்னர் இரு வாகனங்களையும் மாஞ்சோலை எஸ்டே்டிற்கு அனுமதித்தனர்.
உள்ளே செல்லும் வாகனங்கள் மாலை 6:00 மணிக்குள் திரும்ப வேண்டும் என்பது வனத்துறை விதி. ஆனால் வாகனங்கள் இரவு 8:30 மணிக்கே திரும்பி வந்தன. இரு வாகனங்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட முத்துகணேஷ் வனத்துறை காப்பாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் அவர் இன்றுவரை மன்னிப்பு கடிதம் கொடுக்கவில்லை என புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா 'புலம்பல்' செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அபாரத தொகை செலுத்தப்பட்டுவிட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.