உடுமலை:உடுமலை கோட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்பது குறித்து, பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், 'ஆப்சென்ட்' ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், மாணவர்கள் வருகை அவசியம் என, கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உடுமலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான பள்ளிமேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதில், 9 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களின் பெற்றோருக்கு, சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில், 'பள்ளித்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாயிலாக, பெற்றோரிடம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, அடுத்து வரும் 10ம் வகுப்பு தேர்வில், மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில், பெற்றோர் அவர்களை ஊக்குவிப்பதற்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்' என்றனர்.