மதுரை: மதுரையில் கணவரை இழந்த பெண்ணிற்கு கள்ள உறவில் பிறந்த பெண் குழந்தையை வளர்ப்பதாக கூறி விற்க முயற்சித்ததாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் ஓராண்டுக்கு முன் இறந்தார். ஒரு மகள் உள்ள நிலையில் அப்பெண் திருப்பூருக்கு வேலைக்கு சென்றபோது அங்கு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு கர்ப்பமுற்றார். 7 மாதத்திற்கு பிறகே கர்ப்பம் தெரியவந்ததால் கருவை கலைக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து ஊர் திரும்பிய அப்பெண், ஊராருக்கு பயந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்றார். அவருக்கு அன்னமார்பட்டியில் படிக்காமல் மருத்துவம் பார்க்கும் மாலதி சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்தார். பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை தனக்கு வேண்டாம் என அப்பெண் கூற, தான் வளர்ப்பதாக கூறி மாலதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தன் வீட்டில் 2 நாட்களாக குழந்தையை பராமரித்தார். இதை அறிந்த நடுப்பட்டி பாண்டியம்மாள் 60, தன் மகனுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் பெண் குழந்தை தேவைப்படுகிறது எனக்கூறி பெற்றார். இதை அவரது மகன் ஏற்கவில்லை. இதைதொடர்ந்து தானே வளர்ப்பதாக கூறி பாண்டியம்மாள் குழந்தையுடன் மதுரை வந்தபோது தல்லாகுளம் உதவிகமிஷனர் ஜெகன்நாதன் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.
முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அவரிடம் விசாரணை நடத்தியபோது மேற்கண்ட விபரம் தெரிந்தது. மாலதி பணம் வாங்கி கொண்டு குழந்தையை பாண்டியம்மாளிடம் கொடுத்திருக்கலாம் எனக்கருதி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மதுரையில் வளர்ப்பதாக கூறி யாரிடமாவது விற்க பாண்டியம்மாள் திட்டமிட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. குழந்தையை விற்க முயற்சித்ததாக பாண்டியம்மாள், உடந்தையாக இருந்த மகள் அழகுபாண்டியம்மாள் 40, உறவினர் சின்னபாண்டியம்மாள் 45, மாலதி 35, குழந்தையின் தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.