மதுரை: கரூர் காவிரி ஆற்றில் மணல் குவாரிக்கு தடை கோரிய வழக்கில் உரிமம் வழங்குவதற்கு முன் ஆய்வு செய்தது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கரூர் வேடிச்சிபாளையம் ஒத்தக்கடை லட்சுமணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
மல்லபாளையம் நெரூர் வடக்கு காவிரி ஆற்றில் மணல் அள்ள 2022 ல் அரசு அனுமதித்தது. மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தடையில்லா சான்று வழங்குவதற்கு முன் ஆய்வு செய்யவில்லை.2016 ல் குவாரி அனுமதித்தபோது சட்டவிரோதமாக விதிகளை மீறி மணல் அள்ளினர். இதனால் ஆற்றில் மணல் திட்டுகளுக்கு பதில் பாறைதான் தெரிகிறது. தற்போதும் அனுமதித்த அளவைவிட சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தொடர்கிறது. விவசாயம், நாமக்கல், திண்டுக்கல் குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் வழங்குவது பாதிக்கும். நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
நெரூர் வடக்கு காவிரி ஆற்றில் மணல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய தடையில்லா சான்றை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு லட்சுமணன் குறிப்பிட்டார். இதுபோல் குணசேகரன் என்பவர் மற்றொரு மனு செய்தார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: கள ஆய்விற்கு பின் குவாரி செயல்பட உரிமம் வழங்கப்பட்டது. குவாரியை 9 அதிகாரிகள் குழு அவ்வப்போது ஆய்வு செய்கிறது. மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தது.குவாரி விதிமீறல் குறித்து மனுதாரர் தரப்பு தாக்கல் செய்த போட்டோ, வீடியோ ஆதாரங்களை நீதிபதிகள் பார்த்தனர்.
நீதிபதிகள்: உரிமம் வழங்குவதற்கு முன் ஆய்வு செய்தது தொடர்பான அரசு தரப்பு ஆவணங்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய ஆவணங்களை ஏப்.,5 ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.