மதுரை: பட்டாணி இறக்குமதியில் உள்ள தடையை நீக்க வேண்டும்' என, மதுரை தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக கூடுதல் செயலர் ஸ்ரீசந்தோஷ் குமார் சாரங்கியிடம் கோரிக்கை விடப்பட்டது.
டில்லியில் சங்க நிர்வாகிகள் வேல்சங்கர், சாய் சுப்ரமணியம், ஜெயப்பிரகாசம் கூறியதாவது: பட்டாணி இறக்குமதியில் உள்ள தடையை நீக்க வேண்டும். தீப்பெட்டிக்கு போட்டியாக சிகரெட் லைட்டர் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என கூடுதல் செயலரிடம் வலியுறுத்தப்பட்டது.
உணவு பாதுகாப்புத்துறை சி.இ.ஓ., கமல வர்த்தனா ராவிடம் உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தங்களது பொருட்களை தாங்களே ஆய்வு செய்ய வேண்டும் என்பதை ஓராண்டாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். காலாவதி என்பதற்கான லேபிள் மாற்றுவதற்கு ஓராண்டு அவகாசம் தேவை.
ஆண்டுதோறும் லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒருமுறை லைசென்ஸ் பெற்றால் போதும் என மாற்றியமைக்க வேண்டும். இந்தியாவில் கிடைக்கும் தரத்தின் அடிப்படையில் கருப்பட்டி, வெல்லத்திற்கான தரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
சீனி கலந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, வெல்லத்திற்கு புதுபெயரிட்டு தரநிர்ணயம் செய்ய வேண்டும்.
கொரோனா தொற்றின் போது வணிகர்கள் கடைகளை திறந்து வணிகம் செய்ய முடியவில்லை. எனவே வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு விதித்த ரூ.30ஆயிரம் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.
மத்திய நிதித்துறை செயலர் சோமநாதனிடம் உணவு தானியங்களுக்கு வரி விலக்கு உள்ளது. வேளாண் விளைபொருட்களை பதப்படுத்தும் இயந்திரங்களுக்கான வரியை நீக்க வேண்டும்.
ரூ.ஒன்றரை கோடி வரையிலான ஒரு சதவீத வரிக்கு செலுத்த வேண்டிய கூட்டு வரியை தயாரிப்பாளர்களுக்கு நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் என்றனர்.