மேலூர்: மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா திருவாதவூர் அருகே மனைவியுடன் தொடர்பில் இருந்த சினிமா உதவி ஒளிப்பதிவாளரை மனைவி அலைபேசியிலிருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பி வரச்செய்து கை, கால்களை கட்டிப்போட்டு கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சரவணமருது 32, சினிமா உதவி ஒளிப்பதிவாளராக மும்பையில் பணிபுரிந்தார். திருமணமாகாத அவர் விடுப்பில் மதுரை வந்தார். மார்ச் 14 டூவீலரில் வெளியே சென்றவர் திரும்பவில்லை. சகோதரி ராஜேஷ்வரி 29, போலீசில் புகார் கொடுத்தார்.
போலீஸ் விசாரணையில் சரவணமருதுவின் அலைபேசி திருவாதவூர் சமத்துவபுரம் பகுதியில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரிந்தது. அப்பகுதி 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். சரவணமருது திருவாதவூர் சமத்துவபுரத்திற்கு டூவீலரில் செல்வது பதிவாகியிருந்தது.
போலீசாரிடம் சரவணமருதுவை சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி லாரி டிரைவர் சக்திவேல் 36, உறவினர்கள் திருவாதவூர் சமத்துவபுரம் ராஜபிரபு 31, முருகன் 58, உள்ளிட்ட மூவரும் கொலை செய்து கீரனூர் கண்மாயினுள் புதைத்ததை ஒப்பு கொண்டனர். அந்த இடத்தை சண்முகவேல் காட்ட உதவி கமிஷனர் சண்முகம், தாசில்தார் சரவணபெருமாள், டி.எஸ்.பி., ஆர்லியஸ் ரெபோனி முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. உடலை பேராசிரியர் சதாசிவம் தலைமையில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.
போலீசார் கூறியதாவது: திருவாதவூரில் ஆசிரியராக பணிபுரியும் நண்பர் விஜயகுமாரை சரவணமருது அடிக்கடி பார்க்க செல்வார். ஆசிரியரின் உறவினர் மாலதியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாலதிக்கும் கண்டாங்கிபட்டி சக்திவேலுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணமானது. ஒன்றரை வயதில் மகள் வர்ஷினி உள்ளார். தற்போது மாலதி 5 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். மனைவி அலைபேசிக்கு சரவணமருது அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்புவது சக்திவேலுக்கு தெரிந்தது.
மார்ச் 14 மனைவி அலைபேசியில் இருந்து சரவணமருதுவுக்கு திருவாதவூர் வருமாறு சக்திவேல் எஸ்.எம்.எஸ்., அனுப்பினார். அங்கு வந்த சரவணமருதுவை சக்திவேல், மாமனார் முருகன், உறவினர் ராஜபிரபு ஆகியோர் கை மற்றும் காலை கட்டி, பல இடங்களில் கத்தியால் குத்தியும், மர்ம உறுப்பை அறுத்தும் கொலை செய்தனர். பின் சரவணமருதுவை அவர் ஓட்டி வந்த டூ வீலரில் நடுவில் உட்காரவைத்து சக்திவேல் மற்றும் முருகன் இருவரும் 13 கி.மீ., துாரத்திலுள்ள கீரனூரில் முருகன் குத்தகைக்கு எடுத்த நிலத்தருகே உள்ள கண்மாயினுள் ஆடைகளை அகற்றி உள்ளாடையுடன் புதைத்தனர். சரவணமருது டூவீலரை அருகிலுள்ள குவாரி நீரில் மூழ்கடித்து விட்டு ஆடைகளை எரித்துள்ளனர் என்றனர்.
கொலையான சரவணமருது டி.எப்.,டெக் படிப்பை கொல்கட்டாவில் முடித்து ஹிந்தியில் வெளியான ஜிகர்தண்டா சினிமா உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். சிறந்த ஒளிப்பதிவிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.