மதுரை: மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பான வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் கியூ பிராஞ்ச் போலீசாருக்கு எதிரான அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது. மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் சுத்தமானவர் என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டதை நீக்க மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.
மதுரை வழக்கறிஞர் முருககணேசன் ஏற்கனவே தாக்கல் செய்த பொதுநல மனு:
போலீசாரின் பல கட்ட ஆய்விற்கு பின் பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி முகவரி, அடையாளச் சான்று மூலம் இலங்கை அகதிகள் சிலருக்கு 53 பாஸ்போர்ட்கள் 2019ல் வழங்கப்பட்டது. கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., போலீசார் 2019ல் வழக்குப் பதிந்தனர்.
இவ்விவகாரத்தில் பாஸ்போர்ட், தபால்துறை, காவல்துறையைச்சேர்ந்த சில அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளது. கியூ பிராஞ்ச் சி.ஐ.டி.,போலீசார் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ., அல்லது வேறொரு விசாரணை அமைப்பிற்குமாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு முருககணேசன் குறிப்பிட்டார்.
2021 பிப்ரவரியில் நீதிபதிகள் அமர்வு: விசாரணை சரியான பாதையில் செல்கிறது. விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்றுவதற்கான எந்த காரணத்தையும் நாங்கள் காணவில்லை. மதுரை கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., போலீசார் 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
முருககணேசன், 'உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் கியூ பிராஞ்ச் சி.ஐ.டி.,-ஐ.ஜி., ஈஸ்வரமூர்த்தி, மதுரை கியூபிராஞ்ச் சி.ஐ.டி.,இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.
முருககணேசன் தாக்கல்செய்த மற்றொரு மனு: பாஸ்போர்ட்டை புதுப்பித்துத் தர மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உத்தரவிடக்கோரி ஒருவர் வழக்கு தாக்கல் செய்தார்.
அவ்வழக்கின் விசாரணைக்கு அப்பாற்பட்டு, போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கிய காலகட்டத்தில் மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது குறைகாண முடியாது; அவர் சுத்தமானவர் என தனிநீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இது ஏற்புடையதல்ல. தனி நீதிபதியின் உத்தரவிலுள்ள அப்பகுதியை நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி மேல்முறையீடு செய்வதற்கான மனுவை ஏற்றுக் கொண்டதற்கு பிரதான எண் வழங்க உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
தமிழக அரசுத் தரப்பு: விசாரணை முடிந்து சம்பந்தப்பட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை மதுரை மாவட்ட (ஜெ.எம்.,4) நீதிமன்றத்தில் கியூ பிராஞ்ச் போலீசார் தாக்கல் செய்துஉள்ளனர்.
இவர்களில் மத்திய அரசின் பாஸ்போர்ட், தபால்துறை, மாநில அரசுத்துறையின் சில அலுவலர்கள், தனிநபர்கள் அடங்குவர். மத்திய அரசுத்துறையின் அலுவலர்களுக்குஎதிராக இந்திய தண்டனைச் சட்ட பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய மத்தியஅரசிடம் அனுமதி கோரப்பட்டது. ஒருவருக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து மத்திய அரசிடம் தமிழக அரசு மேல்முறையீடு செய்துஉள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: கீழமை நீதிமன்றத்தில் கியூ பிராஞ்ச் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் மேலும் உத்தரவுபிறப்பிக்கத் தேவையில்லை. மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் கீழமை நீதிமன்றத்தை நாடலாம். அவமதிப்பு வழக்கின் மீதான விசாரணை முடிக்கப்படுகிறது.
டேவிட்சன் தேவாசீர்வாதம் சுத்தமானவர் என தனி நீதிபதியின் உத்தரவில்குறிப்பிட்டுள்ள பகுதியை நீக்க மேல்முறையீடு செய்ய மனுதாரர் அனுமதி கோருகிறார்.
இவ்வழக்கில் மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் அல்ல. மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.